2011-02-01 15:31:22

விவிலியத் தேடல்


RealAudioMP3
'கின்னஸ் உலகச் சாதனைகள்' என்பது நாம் அறிந்த ஒரு விஷயம். இந்த உலகச் சாதனை புட்டியலில் இடம் பெறுவதற்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகள் பல நேரங்களில் நம்மை வியப்பில் ஆழ்த்தும். வேறு பல நேரங்களில் வருத்தத்திலும் ஆழ்த்தும்.
சில ஆண்டுகளுக்கு முன் இந்நிகழ்ச்சியைத் தொலைக் காட்சியில் நான் பார்த்தபோது, மனம் சங்கடப்பட்டது. அன்று ஒருவர் நிகழ்ச்சியின்போது, அனைவரும் பார்க்கும் வகையில் 39 கரப்பான் பூச்சிகளை மென்று விழுங்கிக் காட்டினார். சாதனைப் பட்டியலில் இடம் பெற்றார். வேறொருவர், மற்றொரு நாள், கண்ணாடியை மென்று விழுங்கினார். இன்னொருவர் நச்சுப்பாம்புகள் மண்டிக் கிடந்த ஒரு பெட்டிக்குள் அவைகளுடன் நீண்ட நேரம் தங்கிக் காட்டினார். ஒரு சிலர் தாங்கள் வளர்த்திருந்த நகம், தலைமுடி, அல்லது முகமெங்கும் குத்தப்பட்ட அணிகலன்களின் எண்ணிக்கை என்று பல வகைச் சாதனைகளைப் படைத்திருந்தனர்.
அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஓர் உண்மையைச் சொல்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பிறர் கவனத்தை ஈர்க்க வேண்டும்; மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்; மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்பு நம்முடன் பிறந்த ஒன்று. குழந்தையாய் நாம் இருக்கும்போதே, பிறர் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். Elizabeth Kubler Ross என்பவர் ஒரு மனநல அறிஞர். அவர் தன் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட சோகமான அனுபவத்தைப் பற்றி பேசினார். ஒரே சாயலில் ஒரே நேரத்தில் பிறந்த மூன்று பெண்களில் Elizabethம் ஒருவர். சிலவேளைகளில் தன்னைத் தந்தை மடியில் வைத்துக் கொஞ்சியபோது, தன் மூன்று குழந்தைகளில் யாரைக் கொஞ்சுகிறோம் என்று கூடத் தெரியாமல் தந்தை தன்னைக் கொஞ்சியது தன் பிஞ்சு மனதில் பதிந்த வேதனையான ஓர் அனுபவம் என்று அவர் சொல்லியிருக்கிறார். Elizabeth பிற்காலத்தில் மனநல மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். புத்தகங்கள் பல எழுதியுள்ளார். On Death and Dying என்ற இவரது புத்தகம் அதிகப் புகழ்பெற்றது. தான் பெற்ற துன்பம் இவ்வையகம் பெறக் கூடாதென்று அவர் தரும் அறிவுரை இதுதான்: மனிதர்களுக்கு குழந்தைப் பருவம் முதல் சரியான நேரத்தில், சரியான வழிகளில் கவனிப்பும், மதிப்பும் கிடைக்க வேண்டும்.
இறைவனிடமிருந்து நம் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் கவனிப்பு, மதிப்பு இவைகளை "என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்." என்ற திருப்பாடல் 23ன் இந்த வரியில் தெளிவுபடுத்துகிறார் திருப்பாடலின் ஆசிரியர்.

இறைவனின் கவனிப்பு, மதிப்பு எத்தகையது என்பதை ஓர் எடுத்துக்காட்டுடன் சிந்திக்கலாம். பல ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கைகளால் பொருட்களை உருவாக்கினார்கள். தொழில் புரட்சிக்குப் பின், அனைத்துப் பொருட்களும் இயந்திரங்களால் செய்யப்படுகின்றன. நாம் கைகளால் செய்த பொருட்களுக்கும், தற்போது இயந்திரங்கள் வழியே நாம் செய்யும் பொருட்களுக்கும் வேறுபாடுகள் அதிகம். கைவினைப் பொருட்கள் ஒவ்வொன்றும் தனித்துவம் கொண்டது. ஒரு பொருள் மற்றொன்றைப் போல் இராது. ஒரே பாணியில் அவை செய்யப்பட்டிருந்தாலும், சிறு, சிறு வேறுபாடுகள் இருக்கும். இயந்திரங்களால் உருவாகும் பொருட்களில் வேறுபாடுகள் இருக்காது. வேறுபாடு இருந்தால், அவை குறையுள்ளவை என்று ஒதுக்கி வைக்கப்படும்.
இறைவனால் உருவாக்கப்படும் மனிதப் பிறவிகள் இறைவனின் கைவண்ணம். கோடி கோடியாய் இவ்வுலகில் ஒவ்வொரு நாளும் மனிதப் பிறவிகள் உதித்தாலும், ஒவ்வொருவரும் மற்றவர்களை விட வேறுபட்டவர்கள். தனித்துவம் கொண்டவர்கள். Elizabeth Kubler Ross போன்று ஒரே பிரசவத்தில், ஒரே சாயலில் மூவராய் பிறந்தாலும், அவர்கள் ஒவ்வொருவரும் கண்கள், கைவிரல் இரேகை, உள் உறுப்புக்கள் என்று பல வழிகளில் தனித்துவம் பெற்றிருப்பர். இதுதான் கடவுளின் கைவண்ணத்தின் அதிசயம்.

ஒவ்வொருவரையும் பார்த்துப் பார்த்து கவனமாய், கருத்தாய் இறைவன் படைக்கிறார். மனித சமுதாயம் இந்த தனித்துவத்தைக் கொஞ்சம், கொஞ்சமாய் கரைக்க, அழிக்க முற்படுகிறது. பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் நாம் தரும் முதல் தனித்துவம் அக்குழந்தையின் பெயர். ஒரு சில குடும்பங்களில் மிகவும் அக்கறையுடன் குழந்தையின் பெயர் தேர்ந்தெடுக்கப்படும். அமெரிக்காவில் கறுப்பின மக்களின் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்களில் பல விநோதமாக இருக்கும். அதேபோல், அக்குழந்தைகளுக்கு உடுத்தப்படும் உடைகள், அவர்களது சிகை அலங்காரம் ஆகியவைகளும் விநோதமாய், கவனத்தை ஈர்ப்பதாக இருக்கும். இது குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆய்வுகளின் முடிவுகள் ஆழமான, கசப்பான சில உண்மைகளை வெளிக் கொணர்ந்தன. அவ்வுண்மைகளில் ஒன்று இது: ஒடுக்கப்பட்டு, உருக்குலைந்து தமது தனித்துவத்தை முற்றிலும் இழந்த ஒரு குலம் கருப்பினம். கப்பல்களில் மிருகங்களைப் போல் அமெரிக்க மண்ணுக்குக் கொண்டு சேர்க்கப்பட்ட இந்த மனிதர்கள், அங்கு சென்று சேர்ந்ததும் அவர்கள் முதலில் இழந்தது அவர்களது இயற்பெயரை. ஆப்ரிக்காவில் வழங்கப்பட்ட பெயர்கள் அமெரிக்காவில் இருந்த முதலாளிகளால் சொல்ல முடியாதப் பெயர்களாய் இருந்தன. எனவே அவர்களது பெயர்கள் ஜான், டாம் என்று சுருக்கப்பட்டன. அதைவிடக் கொடூரம் என்னவென்றால், எண்கள் அல்லது முதலாளியின் ஒரு அடையாளச் சின்னம் நெருப்பில் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்கள் உடலில், நெற்றியில், கைகளில், முதுகில் பதிக்கப்பட்டது. இவ்வாறு, தங்கள் தனித்துவத்தை இழந்து, உடலில் பதிந்த எண்களையும் சின்னங்களையும் சுமந்து, முதலாளி உரிமை கொண்டாடிய ஒரு ஜடப்பொருளாக மாறிய இவர்களுக்கு தங்கள் மனிதத்துவத்தை, தனித்துவத்தை நிலைநாட்ட, வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டன. இப்படி சந்ததிகள் பல தங்கள் தனித்துவத்தை இழந்த நிலையில், இவர்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது. தாங்கள் இழந்த தனித்துவம் தங்கள் குழந்தைகளுக்காகிலும் கிடைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர். எனவே, குழந்தைகளுக்கு அவர்கள் கொடுத்த பெயர்கள், குழந்தைகளின் உடை, சிகை அலங்காரம் இவை பலரது கவனத்தை ஈர்க்க வேண்டும். தன் குழந்தை கூட்டத்தில் ஓர் எண்ணாக இல்லாமல் தனித்து நிற்க வேண்டும் என்று விரும்பினர். அமெரிக்க ஐக்கிய நாடு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தை, “கறுப்பின வரலாறு மாதம்” என்று கடைபிடிக்கிறதென்று இத்திங்கள் நாம் வாரம் ஓர் அலசலில் சிந்தித்தோம். அந்த வரலாற்றின் காயப்பட்ட பக்கங்கள் இவை.

உலகின் எல்லா நாடுகளிலும் ஒடுக்கப்பட்டோரின் வரலாறு இதேதான். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்கள் உடுத்தக்கூடிய, உடுத்த முடியாத உடைகள் அவர்களது சிகை அலங்காரம் என்று பல முடிவுகளை மேல் குடியினர் என்று தங்களையே அழைத்துக் கொள்பவர்கள் கட்டுப் படுத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் காலில் செருப்பு அணியக் கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது போன்ற அற்பத்தனமான அடக்கு முறைகள் இன்றும் நிலவி வருவது வேதையான உண்மை. இம்மக்களின் தனித்துவத்தை அழிக்கும் முயற்சிகள் இவை.
இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாம்களில் இதேபோல் அனைத்து யூதர்களின் தனித்துவமும் அழிக்கப்பட்டது. அவர்களது பெயர்களுக்குப் பதில், அவர்கள் கைகளில் அல்லது நெற்றியில் அவர்களது கைதி எண் பச்சை குத்தப்பட்டது. எல்லா இடங்களிலும் அவர்கள் எண்களாலேயே அழைக்கப்பட்டனர். போர் முடிந்து விடுதலை பெற்ற யூதர்களில் பலர், தங்கள் உடலில் பொறிக்கப்பட்ட இந்த எண்களை அழிப்பதற்கு பல வேதனையான வழிகளை மேற்கொண்டனர்.

இறைவன் ஒவ்வொரு மனிதரையும் தனித்துவம் கொண்டவர்களாய் படைக்க ஏராளமான அக்கறையும், கவனமும் எடுத்துக் கொள்கிறார். அந்தத் தனித்துவத்தை அழிக்க ஏராளமான அக்கறையும், கவனமும் எடுத்து வருகிறது மனித குலம். மனிதர்களின் தனித்துவத்தை அழித்து வரும் மனித வரலாறு நம்மை வேதனையில், வெட்கத்தில் தலை குனிய வைக்கிறது.

இறுதியாக, ஓர் எண்ணம். 'எண்ணெய் பூசுதல்' என்ற வார்த்தையுடன் மிக நெருங்கியத் தொடர்புடைய ஒரு வார்த்தை 'திருப்பொழிவு செய்யப்படுதல்'. சென்ற வாரம் சாமுவேல் முதல் நூலின் 16ம் பிரிவில் சாமுவேலுக்கு முன் தாவீது அறிமுகம் செய்துவைக்கப்பட்டதும், அங்கு நடந்ததை இவ்வாறு வாசித்தோம்:
சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. (சாமுவேல் - முதல் நூல் 16: 13)

திருப்பொழிவு பெற்றதும் ஆடுமேய்க்கும் சிறுவன், தாவீது என்ற பெயருடன் அறிமுகமானதை நாம் சிந்தித்தோம். திருப்பொழிவு செய்யப்படும் ஒவ்வொருவரும் பெறும் மற்றொரு பெயர் 'மெசியா'. இந்த வார்த்தையின் பொருள் - பூசப்பட்டவர், திருப்பொழிவு செய்யப்பட்டவர், காப்பாற்றுபவர். இஸ்ரயேல் மக்கள் மத்தியில் திருப்பொழிவு செய்யப்பட்ட தலைவர்கள், இறைவாக்கினர்கள், மன்னர்கள் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டிருந்த ஒரு முக்கியப் பொறுப்பு அந்த மக்களைக் காப்பாற்றுவது.

மக்களைக் காப்பது, இந்த உலகத்தைக் காப்பது என்பதைச் சிந்திக்கும்போது, தனியொரு ஆள் நம்மையெல்லாம் காப்பதைப் பற்றிச் சிந்திக்கலாம், அல்லது நாம் அனைவரும் சேர்ந்து நம்மைக் காத்துக் கொள்வதைப் பற்றிச் சிந்திக்கலாம்.
முதல் வழி வழக்கமாய் நமது கதைகளில், திரைப்படங்களில் வரும். நாயகன் ஒருவர் வந்து நமது பிரச்சனைகள் எல்லாவற்றையும் தீர்த்து நம்மைக் காப்பார். மற்றொரு வழியில் மனித சமுதாயம் முழுவதுமே இணைந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். அண்மையக் காலங்களில், நமது உலகைக் காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்று பலவழிகளில் நாம் நினைவுறுத்தப்படுகிறோம். நாம் எல்லாருமே 'மெசியாக்கள்'.
இந்த ஒவ்வொரு மெசியாவையும் தனிப்பட்ட முறையில் கவனமாய்ப் படைத்து இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பியுள்ளார். அதற்கு முக்கிய காரணம்... நம் ஒவ்வொருவருக்கும் ஒரு முக்கியப் பணி உள்ளது. இந்த ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே நொடியில் காப்பது என்பதை விட, நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியிருக்கும் சிறு சிறு உலகங்களை மீட்கும் மெசியாக்களாக வேண்டும்.
இரு வாரங்களுக்கு முன் நான் ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்து கொண்ட கதை ஒன்று உங்களுக்கு நினைவிருக்கலாம். "நம்மிடையே ஒருவர் மெசியாவாக இருக்கிறார்" என்று உணர ஆரம்பித்த ஒரு மடத்தின் துறவிகள் எப்படி தாங்கள் ஒவ்வொருவரும் அந்த மெசியாவாக இருக்கக் கூடும் என்றும், தனது சகோதரர்களில் ஒருவர் அந்த மெசியாவாக இருக்கக் கூடும் என்றும் சிந்திக்க ஆரம்பித்ததால் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி தாங்களே மதிப்பு கொண்டனர் என்றும், மற்றவர்களையும் மதிப்புடன் நடத்த ஆரம்பித்ததால் அந்த மடம் மீண்டும் புத்துயிர் பெற்றதென்றும் சிந்தித்தோம். அந்த மதிப்பை இன்று மீண்டும் ஒரு முறை நாம் உணர, திருப்பாடல் 23ன் இந்த வரி நமக்கு உதவுகின்றது. "என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்." நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட வகையில் கவனமாய் உருவாக்கி, நம் தலை மீது நறுமணத் தைலம் பூசி அருட்பொழிவு செய்து, உலகைக் காக்கும் மெசியாவாக நம் ஒவ்வொருவரையும் இறைவன் மாற்றுகிறார் என்பதை ஆழமாய் உணர்வதற்கு, அதை இன்னும் ஆழமாய் நம்புவதற்கு முயல்வோம்.







All the contents on this site are copyrighted ©.