2011-02-01 15:31:34

பிப்ரவரி 02, வாழந்தவர் வழியில்...


அமெரிக்காவின் பெருநகரங்களில் ஒன்றான நியூயார்க்கில் உள்ள GCT என்ற Grand Central Terminal இரயில் நிலையம் 1913ம் ஆண்டு பிப்ரவரி 2ம் நாள் திறக்கப்பட்டது. இன்று உலகிலேயே மிகப் பெரிய இரயில் நிலையம் என்று வழங்கப்படும் GCT 44 நடைமேடைகளும், 67 இரயில் பாதைகளும் கொண்டது.
இந்த இரயில் நிலையத்தின் முகப்பு அரங்கக் கூரையில் விண்மீன்கள் அடங்கிய வான்வெளி ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது. 1930ல் முடிக்கப்பட்ட இந்த ஓவியம் நாளடைவில் புகையும் அழுக்கும் படிந்து மங்க ஆரம்பித்தது. இரயில் வண்டிகளின் நிலக்கரி மற்றும் டீசல் புகையால் இந்த மாற்றம் என்று முதலில் எண்ணப்பட்டது. ஆராய்ச்சிக்குப் பிறகு தெரியவந்த தகவல் அதிர்ச்சி தந்தது. அந்த இரயில் நிலையத்தில் மனிதர்கள் விடும் சிகரெட் புகையே கூரையில் படிந்து அந்த ஓவியத்தை மங்க வைத்தது என்பதே அந்த அதிர்ச்சித் தகவல். 12 ஆண்டுகள் இந்த இரயில் நிலையத்தின் கூரைப்பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் 1998ம் ஆண்டு திறக்கப்பட்டபோது, ஓரிடத்தில் மட்டும் படிந்திருந்த கறுப்புப் பகுதியை அவர்கள் நீக்காமல் விட்டுவைத்தனர். அதற்குக் காரணமும் சொல்லப்பட்டது. சிகரெட் புகையால் வான்வெளியில் நாம் ஏற்படுத்தும் பாதிப்புக்களை உணர்த்தும் ஓர் எச்சரிக்கையாக அது இருக்கவேண்டும் என்பதே அக்காரணம்.
உலகின் மிகப் பெரும் இரயில் நிலையம் சுற்றுச்சூழலைக் குறித்து பாடங்கள் சொல்லித் தருகிறது. இந்த உலகமும் ஓர் இரயில் நிலையம்தான். நாம் அனைவரும் பயணிகளே. இந்தப் பயணத்தின் போது, அந்த இரயில் நிலையத்தை நாம் இன்னும் அதிகம் மாசுபடுத்தாமல் நம் பயணத்தைத் தொடர்வோமே!GCT இரயில் நிலையம் இன்னும் இரு ஆண்டுகளில், 2013ல், தன் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடும்.







All the contents on this site are copyrighted ©.