2011-01-31 15:37:10

திருத்தந்தை : இயேசுவின் மலைப்பொழிவு உலகின் போலியான விழுமியங்களிலிருந்து மனிதனை விடுவிக்கின்றது


சன.31,2011. இயேசுவின் மலைப்பொழிவுப் போதனை வாழ்வின் புதிய திட்டத்தை நமக்கு வழங்குகின்றது மற்றும் உலகின் போலியான விழுமியங்களிலிருந்து மனிதனை விடுவிக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

இயேசுவின் மலைப்பொழிவுப் போதனை, உண்மையிலேயே நன்மையான செயல்களுக்கு மக்கள் தங்களைத் திறப்பதற்கும் வலியுறுத்துகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் முப்பதாயிரம் பயணிகளுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து ஆற்றிய மூவேளை செப உரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை.

ஏழையரின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர், தூய்மையான உள்ளத்தோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர் பேறுபெற்றோர் என்று இயேசு மலையிலிருந்து அறிவித்த போது, அது புதிய கருத்துக் கோட்பாடாக இல்லை, மாறாக உன்னதத்திலிருந்து வரும் போதனையாகவும் மனித நிலைமையைத் தொடுவதாகவும் இருக்கின்றது என்றார் திருத்தந்தை.

மலைப்பொழிவுப் போதனை, கிறிஸ்தவர்களின் புனித வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கின்றது என்றும் கடவுள் வலிமையானவர்களை நாணச் செய்ய பலவீனர்களைத் தேர்ந்தெடுக்கிறார் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆண்டவரைத் தேடுவதற்கும் அவரை என்றென்றும் மகிழ்ச்சியோடு பின்செல்லுவதற்கும் சக்தியைக் கொடுக்குமாறு செபித்து மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.