2011-01-29 15:48:17

வட ஆப்ரிக்க மக்கள் எழுச்சிகளை அரசு அதிகாரிகளால் அடக்க முடியாது, கத்தோலிக்க வல்லுனர்


சன.29,2011. சாதாரண மக்கள் மனிதாபிமானமற்ற தங்கள் வாழ்க்கை நிலையை மேலும் சகித்துக் கொண்டிருக்க முடியாத பட்சத்தில், தற்சமயம் சமூக நீதி கேட்டு எகிப்திலும் பிற வட ஆப்ரிக்க நாடுகளிலும் மக்கள் எழுச்சி வெடித்துள்ளது என்று அரபு மற்றும் இசுலாமியக் கல்வியில் வல்லுனரான அருள்திரு Justo Lacunza Balda தெரிவித்தார்.
டுனிசியாவையடுத்து தற்சமயம் எகிப்தில் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளதையொட்டிப் பேசிய, அரபு மற்றும் இசுலாமியக் கல்விக்கான உரோம் பாப்பிறை நிறுவனத்தின் முன்னாள் அதிபர் அருள்திரு லக்குன்சா, இந்த எழுச்சிகளை காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறினார்.
அரபு நாடுகளில் சுதந்திரம் மற்றும் மனித மாண்பை வலியுறுத்தும் மக்களின் எழுச்சிகளை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார் அவர்.
 எகிப்தில், வேலைவாய்ப்பின்மை, ஊழல், விலைவாசியேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து இம்மாதம் 25ம் தேதி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர் என்றுரைத்த அக்குரு, எகிப்து, டுனிஸ், அல்ஜீரியா, ஜோர்டன், மொராக்கோ, ஏமன் ஆகிய நாடுகளில் வறுமை, துன்பம், ஜனநாயகமின்மை, மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடருகின்றன என்றார்.







All the contents on this site are copyrighted ©.