2011-01-29 15:47:27

மனிலா புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தினருக்குத் திருத்தந்தை வாழ்த்து


சன.29,2011. கல்விக்கு, உண்மையான ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையாக விசுவாசமும் அறிவும் எப்பொழுதும் இருக்கின்றது என்பதை மறந்து விடாமல், கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அறிவு, ஆன்மீகம் மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்குத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தினார்.
பிலிப்பைன்சின் மனிலா புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதன் 400ம் ஆண்டை முன்னிட்டு இச்சனிக்கிழமை திருத்தந்தை வழங்கிய ஒலி-ஒளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த 400 ஆண்டுகளில் பல சவால்களுக்கு மத்தியில் இந்த நிறுவனத்தை நடத்தி வரும் தொமினிக்கன் சபையினருக்கும் அங்கு பயிலும் மாணவருக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகம், தூர கிழக்கு நாடுகளில் கத்தோலிக்க உயர் கல்விக்கென இருக்கும் மிகப் பழமையான நிறுவனமாக இருக்கின்றது, இது தொடர்ந்து அப்பகுதியில் திருச்சபையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது என்றுரைத்துள்ள அவர், இயேசு கிறிஸ்துவின் ஒளியில் மனித மற்றும் இறைவன் சார்ந்த கூறுகளை அப்பல்கலைகழகத்தினர் தொடர்ந்து தேட வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளார்.
1611ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அப்போதைய மனிலா பேராயர் Miguel de Benavides ஆல் புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இது உலகிலுள்ள மிகப் பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். ஆசியாவிலுள்ள ஒரே பாப்பிறைப் பல்கலைக்கழகமான இதனைத் திருத்தந்தையர் ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பால் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.