2011-01-29 15:47:52

தொழுநோயாளர்கள் சமமாக மதிக்கப்பட திருப்பீட உயர் அதிகாரி வேண்டுகோள்


சன.29,2011. உலகில் நலவாழ்வுத் துறையில் ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான அடிப்படை சிகிச்சை வசதிகள் கிடைப்பதற்கு உறுதி வழங்கும் “உண்மையான நீதி” கிடைப்பதற்கு அனைவரும் உழைக்குமாறு திருப்பீட நலவாழ்வுத்துறை தலைவர் பேராயர் சிக்மண்ட் சிமோவிஸ்கி (Zygmunt Zimowski) கேட்டுக் கொண்டார்.
சனவரி 30 இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்படும் 58வது உலக தொழுநோயாளர் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பேராயர் சிமோவிஸ்கி, உடல்ரீதியாக உருக்குலைந்து காணப்படும் தொழுநோயாளர்கள் சமூகத்தில் சமத்துவமற்ற நிலையை எதிர்நோக்குகின்றனர் என்று கூறினார்.
உலகில் இலட்சக்கணக்கான நோயாளிகள் தங்களது நோய்க்கான அத்தியாவசியமான மருந்துகளைப் பெறுவதில் இன்னல்களை எதிர்நோக்குகிறார்கள் என்று கூறும் பேராயர், தொழுநோயாளர்கள் மனித மாண்புடன் வாழ ஆவன செய்யப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
ஹான்சன்ஸ் நோய் என அழைக்கப்படும் தொழுநோயால் உலகில் 25 இலட்சம் முதல் 28 இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 80 விழுக்காட்டினர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்று உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது . அங்கோலா, பிரேசில், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, கினி, இந்தோனேசியா, மடகாஸ்கர், மொசாம்பிக், நேபாளம், நைஜர் போன்ற நாடுகள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.