2011-01-29 15:06:57

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
பங்குத்தந்தை ஒருவர் குழந்தைகளுக்கு மறைகல்வி வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். "குழந்தைகளே, என்கிட்டே இருக்கிற எல்லாப் பொருட்களையும் வித்து, அந்தப் பணத்தை ஏழைகளுக்கு நான் கொடுத்தா, நான் மோட்சத்துக்கு, விண்ணகத்துக்குப் போக முடியுமா?" என்று கேட்டார். குழந்தைகள் 'கோரஸ்'ஆக "முடியாது" என்று சொன்னார்கள். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம், குழப்பம்.
"சரி, நம்ம பங்குல இருக்கிற எல்லா நோயாளிகளுக்கும் நான் தினமும் மருந்து, மாத்திரை எல்லாம் குடுத்து கவனிச்சிக்கிட்டா, நான் விண்ணகத்துக்குப் போக முடியுமா?" என்றார். அவர் கேள்வியை முடிப்பதற்குள், "முடியாது" என்று குழந்தைகள் கத்தினர்.
"எல்லாக் குழந்தைகளுக்கும் நான் தினமும் சாக்லேட், மிட்டாய், பொம்மை எல்லாம் குடுத்தா?" என்று கேட்டார். மீண்டும் குழந்தைகள் "முடியாது" என்றே சொன்னார்கள். பங்குத் தந்தைக்குப் பெரிய அதிர்ச்சி.
"சரி, அப்ப நான் விண்ணகத்துக்குப் போக என்ன செய்யணும்?" என்று அவர்களையேக் கேட்டார். ஒரு சிறுமி எழுந்து நின்று, "நீங்க விண்ணகத்துக்குப் போகணும்னா, முதல்ல சாகணும்." என்று கள்ளம் கபடில்லாமல், சிரித்துக் கொண்டே சொன்னாள்.

பங்குத் தந்தைக்குத் தெரியாத ஒரு மிகச்சாதாரண உண்மையை அந்தக் குழந்தை அன்று அவருக்குச் சொல்லித் தந்தாள். ஆனால், அது முழு உண்மை அல்ல என்பதை நாம் உணர்வதற்கு இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றன.
விண்ணகம் என்பது, இறந்தபின் நமக்குக் கிடைக்கும் பரிசு என்று எண்ணுபவர்களுக்கு இக்குழந்தை சொன்னது உண்மையாகப் படலாம். ஆனால், விண்ணகம் என்பது மண்ணகத்திலேயே சாத்தியம் என்பதை இயேசுவும், இன்னும் பல இறைவாக்கினர்களும், புனிதர்களும் சொல்லிச் சென்றுள்ளனர். வாழ்ந்தும் காட்டியுள்ளனர். இயேசு இன்றைய நற்செய்தியில் கூறும் 'பேறுபெற்றோர்' என்ற மலைப்பொழிவு இத்தகைய உண்மையை ஆணித்தரமாகக் கூறும் ஒரு பகுதி. Jacques Pohier என்ற விவிலிய அறிஞர் கூறிய ஒரு கூற்று இது: "இயேசு மலைப் பொழிவில் 'பேறுபெற்றோர்' என்று கூறிய கருத்துக்கள் மறுஉலக வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள் அல்ல; இவ்வுலகில் நாம் வாழக்கூடிய மறு வாழ்வைப்பற்றிய வழிகாட்டிகள்." “Beatitudes are not the map of a life in another world, but the map of another life in this world.” Jacques Pohier, Scripture scholar.

விண்ணகம் என்பது என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால், நாமும் பல தெளிவுகளைப் பெறலாம். விண்ணகம் என்பது அடிப்படையில் முழுமை அடைவது, நிறைவு பெறுவது என்ற ஆழமான எண்ணங்களை உள்ளடக்கியது. அந்த முழுமையில், நிறைவில் நாம் அதிகம் அனுபவிப்பது ஆனந்தம். ஆனந்தம், மகிழ்ச்சி என்று சொன்னதும், நம் மனதில் பல எண்ணங்கள் ஒரே நேரத்தில் அலைமோதுகின்றன. முதல் எண்ணம்... ஆனந்தம், மகிழ்வு ஆகியவை நம்மைத் தேடி வருமா, அல்லது நாம் அவற்றைத் தேடிப் போக வேண்டுமா என்ற கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முயலும் பல கதைகள் உண்டு.

தன் வாலில்தான் மகிழ்ச்சி உள்ளதென்று தன் வாலையே நாள் முழுவதும் துரத்திப் பிடிக்க சுற்றிச்சுற்றி வந்த குட்டிப்பூனையிடம், "உன் வாலில்தான் மகிழ்ச்சி இருக்கிறதென்றால், அதை நீ துரத்த வேண்டாம். உன் வேலைகளை நீ ஒழுங்காகச் செய்தால், உன் மகிழ்வு எப்போதும் உன்னைத் தொடர்ந்து வரும்." என்று தாய் பூனை சொன்னதாம். இது ஒரு கதை.
வண்ணத்துப் பூச்சி ஒன்றைப் பிடிப்பதற்கு நாள் முழுவதும் அதைத் துரத்திய ஒருவன் களைத்துப் போய் அமர்ந்தபோது, அவன் துரத்திச் சென்ற வண்ணத்துப் பூச்சி அவனது தோள்மீது வந்து அமர்ந்தததாம். இது வேறொரு கதை. இப்படி மகிழ்வைத் துரத்துவதைப் பற்றி பல கதைகள் உண்டு. அவைகளில் இதுவும் ஒன்று.

அகன்ற ஒரு சாக்கடைக்கருகே ஒருவர் நடந்து கொண்டிருந்தார். நாற்றம் தாங்காமல் மூக்கைப் பிடித்துக்கொண்டு நடந்த அவர் திடீரென நின்றார். அவர் கண்களில் ஒளி. அந்தச் சாக்கடையில் ஏதோ ஒன்று பளீரென ஒளிர்ந்தது. உற்றுப் பார்த்தபோது, அது ஒரு வைரநகை போலத் தெரிந்தது. கரையில் நின்றபடி, கைகளை மட்டும் சாக்கடையில் விட்டு அதை எடுக்க முயன்றார். முடியவில்லை. அடுத்து, சாக்கடையில் இடுப்பளவு ஓடிய அந்த அழுக்கு நீரில் நின்று தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் கரையேறி வந்து பார்த்தபோது, அந்த நகை அதே இடத்தில் பளிச்சிட்டது. அடுத்து, மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தச் சாக்கடையில் முற்றிலும் மூழ்கித் தேடினார். ஊஹும்.. ஒன்றும் பயனில்லை. விரக்தியுடன் அவர் சாக்கடையை விட்டு வெளியேறிய அந்த நேரம், ஒரு முனிவர் அந்தப் பக்கம் வந்தார். "எதைத் தேடுகிறீர்கள்? எதையாவுது தவற விட்டுவிட்டீர்களா?" என்று கேட்டார். நகையைப்பற்றிச் சொன்னால், முனிவர் அதை எடுத்துக்கொள்வாரோ என்று பயந்து, அவர் பேசத் தயங்கினார். அவரது தயக்கத்தைக் கண்ட முனிவர், தான் அவருக்கு உதவி மட்டுமே செய்யப்போவதாக வாக்களித்தார். சாக்கடையில் மூழ்கியவர் முனிவரிடம் சாக்கடைக்குள் தான் கண்ட அந்த நகையைச் சுட்டிக் காட்டினார். அதை எடுக்க தான் பட்ட கஷ்டங்களையும் கூறினார். முனிவர் அவரிடம், "நீங்கள் ஒருவேளை தவறான இடத்தில் அந்த நகையைத் தேடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். வேறு இடத்தில் தேடுங்கள். கீழே மட்டும் பார்க்காதீர்கள். மேலேயும் பாருங்கள்." என்று சொல்லிவிட்டு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார். முனிவர் சொன்னபடி மேலே பார்த்தவருக்கு ஆனந்த அதிர்ச்சி. அவர் நின்ற இடத்தில் ஒரு மரம். அம்மரத்தின் கிளையில் அந்த நகை தொங்கிக் கொண்டிருந்தது. அதுவரை அவர் அந்த நகையின் பிம்பத்தை உண்மை நகை என்று எண்ணி சாக்கடைக்குள் தேடிக் கொண்டிருந்தார்.

உண்மையான மகிழ்வு, ஆனந்தம் இவைகளைத் தேடுவதற்குப் பதில், மகிழ்வின் மாய பிம்பங்களை நம்மில் எத்தனை பேர் தேடுகிறோம்? நம்மில் எத்தனை பேர் தவறான இடங்களில் மகிழ்வைத் தேடுகிறோம்? மகிழ்வேன்று நினைத்தவை மறைந்து போகும்போது, எத்தனை பேர் மனமுடைந்து தற்கொலை முயற்சிகள்வரை செல்கின்றனர்?
இவைகளுக்கு மாற்றாக, இன்றைய மூன்று வாசகங்களும் உள்ளத்தின் நிறைவை, வாழ்வின் நிறைவை அடையும் வழிகளைச் சொல்கின்றன. இந்த நிறைவை அடைய மரணம்வரை, அந்த மரணத்திற்குப்பின் வரும் விண்ணகம்வரை காத்திருக்கத் தேவையில்லை. இந்த மண்ணகத்தை விண்ணகமாக்கும் வழிகள், சக்தி நம்மிடமே உள்ளன.

இந்த மனநிலையோடு இன்றைய ஞாயிறுக்குரிய மூன்று வாசகங்களையும் அமைதியாக, ஒருவித தியானநிலையில் வாசித்துப் பயனடைய உங்களை அழைக்கிறேன். நமது ஞாயிறு வாசகங்கள் ஆழமான, அழகான கருத்துக்களைக் கூறும் போது, ஒருசில வேளைகளில், அதற்கு மேல் கதைகளை, எடுத்துக்காட்டுகளைக் கூறி அந்த இறை வார்த்தையின் ஆழத்தைக் குறைத்து விடுகிறோமா என்ற குற்ற உணர்வு எனக்கு அவ்வப்போது ஏற்படும். இன்றைய வாசகங்களைப் பார்த்ததும், அந்த எண்ணம் மீண்டும் எழுந்தது. இன்றைய வாசகங்களின் ஒரு சில பகுதிகளை இப்போது ஒரு தியான முறையில் கேட்போம்.
இறைவாக்கினர் செப்பனியா 2: 3
நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்; நேர்மையை நாடுங்கள்; மனத்தாழ்மையைத் தேடுங்கள். 
எளிய மனம் கொண்டவர்களாய் நேர்மை, மனத்தாழ்ச்சி ஆகியவைகளைக் கடைபிடிக்கும்படி இறைவாக்கினர் தரும் அழைப்பு இது.

இறைவாக்கினர் செப்பனியா 3: 12-13
ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள். 
ஏழை, எளியோர் நாட்டில் இருப்பதால், அங்கு விளையும் நன்மைகளைக் கூறுகிறார் இறைவாக்கினர். பாகுபாடுகள் ஏதும் இல்லாமல் அனைவரும் பந்தியமர்ந்து உண்டபின் அனைவரும் ஒன்றாய் இளைப்பாறும் நாடு உண்மையாகவே மண்ணில் வந்த விண்ணகம்தானே!

மலைப் பொழிவில் இயேசு பகர்ந்த 'பேறுபெற்றோர்' இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளது. இப்பகுதி சனவரி 30ம் தேதியான இஞ்ஞாயிறன்று தரப்பட்டுள்ளதை ஓர் பொருத்தமான நிகழ்வாக நாம் காணலாம். இயேசுவின் மலைப்பொழிவால் அதிகம் கவரப்பட்டவர் மகாத்மா காந்தி. இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர், ஆகியோரை வரிசைப்படுத்தி, வன்முறையற்ற அகிம்சை வழியை இம்மலைப்பொழிவில் ஆணித்தரமாக இவ்வுலகிற்குச் சொல்லியுள்ள இயேசுவை தன் மானசீகத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் காந்தி. அவரைப் போலவே, மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரையும் அதிகம் கவர்ந்த விவிலியப் பகுதி மலைப்பொழிவு. அகிம்சை வழியை உலகில் வாழ்ந்து காட்டிய மகாத்மா காந்தி குண்டுக்குப் பலியான சனவரி 30 அன்று அவர் மனதைக் கவர்ந்த மலைப்பொழிவை நாமும் முழு மனதோடு கேட்போம்.

மத்தேயு நற்செய்தி 5: 1-10
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச்சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
 நாம் இப்போது கேட்ட இந்த வார்த்தைகள் நமது உள்ளத்தில் உருவாக்கியுள்ள நல்ல சிந்தனைகளுக்கு நம்மால் முடிந்த வரை செயல்வடிவம் கொடுக்க இறைவன் நம் அகக்கண்களைத் திறக்கும்படி வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.