2011-01-28 15:55:16

திருத்தந்தை : கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான இறையியல் உரையாடல்கள், முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் செல்வதற்கு உதவுகின்றன


சன.28,2011. கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இடம் பெற்று வரும் இறையியல் உரையாடல்கள் இவ்விரு சபைகளும் ஒன்றையொன்று இன்னும் அதிக ஆழமாய்ப் புரிந்து கொள்வதற்கு வழி அமைப்பது மட்டுமல்ல, கிறிஸ்து நமக்கு விடுத்துள்ள முழு ஒன்றிப்பை நோக்கி உறுதியுடன் தொடர்ந்து செல்வதற்கும் உதவுவதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

கத்தோலிக்கத் திருச்சபைக்கும் கீழைரீதி ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையேயான சர்வதேச இறையியல் உரையாடல் பணிக்குழுவின் முப்பது உறுப்பினர்களை இவ்வெள்ளிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

கிறிஸ்தவர்கள், தனிப்பட்ட முறையிலும் சமூகங்களாகவும் சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கி வரும் பகுதிகளிலிருந்து இந்தப் பணிக்குழுவில் உள்ள பலர் வந்திருப்பது பற்றிக் குறிப்பிட்டு, இப்பகுதிகளில் அமைதியும் நீதியும் ஏற்படுவதற்கு நம்பிக்கை மற்றும் பரஸ்பர அங்கீகரிப்பு நோக்கி அனைத்துக் கிறிஸ்தவர்களும் சேர்ந்து உழைக்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.

2003ம் ஆண்டு சனவரியில் தனது உரையாடலைத் தொடங்கிய இப்பணிக்குழு, இரண்டு கட்டமாக நடத்தியக் கூட்டங்களில் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்தும் திருத்தந்தை எடுத்துச் சொன்னார்.







All the contents on this site are copyrighted ©.