2011-01-27 15:10:25

பிலிப்பின்ஸில் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்த கத்தோலிக்க நிருபர் கொலை


சன.27, 2011. பிலிப்பின்ஸ் நாட்டில் பலவான் தீவில் இச்செவ்வாயன்று கத்தோலிக்க பத்திரிகை நிருபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

47 வயதான ஜெரி ஒர்த்தேகா என்பவர் கால்நடை மருத்துவராகப் பணி செய்தவர். இவர் வானொலி நிகழ்வுகளையும் நடத்தி வந்தார். பலவான் தீவில் உள்ள பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவர் இவர். அத்தீவில் அரசின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட சுரங்கத்தொழிலால் அத்தீவின் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பதை எடுத்துச் சொன்னார் ஜெரி ஒர்த்தேகா.

மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல விவகாரங்களில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததால், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடந்த 25 ஆண்டுகளில் பிலிப்பின்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்டுள்ள 142 பத்திரிக்கை நிருபர்களில் ஜெரி ஒர்த்தேகாவும் ஒருவர். பிலிப்பின்ஸில் வளர்ந்து வரும் வன்முறைகளைக் குறித்தும், சிறப்பாக பத்திரிகை நிருபர்கள், மத ஆர்வலர்கள் ஆகியோர் கொலை செய்யப்படுவது குறித்தும் அண்மையில் அந்நாட்டின் ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.