2011-01-27 15:12:08

பான் கி மூன் : பெண்கள், குழந்தைகள் நலவாழ்வு முன்னேற்றத்துக்கான நிதி உதவிக்கு வேண்டுகோள்


சன.27, 2011. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வுக்கென உறுதி வழங்கப்பட்டுள்ள தொகைகள் மட்டும் அவர்களைக் காப்பாற்றப் போவதில்லை என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.

இப்புதனன்று ஜெனீவாவில் நடைபெற்ற பெண்கள், குழந்தைகள் நலவாழ்வு கண்காணிப்பு என்ற ஐ.நா.அமைப்பின் மேல்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய மூன் இவ்வாறு கூறினார்.

உலகளாவிய நிலையில் 1 கோடியே 60 இலட்சம் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு நலவாழ்வும் பாதுகாப்பும் வழங்க 2015ம் ஆண்டுக்குள் 400 கோடி டாலர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது இவர்களைக் காக்கும் உதவித்தொகைகள் போதிய அளவில் இல்லை என்பதை எடுத்துரைத்த ஐ.நா. பொதுச் செயலர், இவர்களின் நிலையை உயர்த்த அனைத்து நாடுகளும் இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

உறுதி வழங்கப்பட்டுள்ள தொகைகள் வந்து சேர்வது குறித்தும், அவை தகுந்த முறையில் செலவிடப்படுவது குறித்தும் கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கை இவ்வாண்டு மே மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவும் ஜெனீவாவில் நடந்த இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.