2011-01-27 15:07:41

பாகிஸ்தான்:வகுப்புவாதப் பிரிவினைகள், வன்முறைகள் விலக ஆயர்கள் செபத்திற்கு அழைப்பு


சன.27, 2011. பாகிஸ்தானில் தொடர்ந்துவரும் வகுப்புவாதப் பிரிவினைகள், அதன் விளைவாக எழும் வன்முறைகள் ஆகியவை நாட்டிலிருந்து விலக மக்கள் செபிக்க வேண்டுமென அந்நாட்டின் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நாட்டில் முழு அமைதி நிலவ அனைத்துக் கத்தோலிக்கக் கோவில்களிலும் வருகிற ஞாயிறு சனவரி 30ம் தேதியன்று சிறப்பானச் செப வழிபாடுகள், தவ முயற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டுமென்று இலாகூர் உயர்மறைமாவட்டப் பேராயர் இலாரன்ஸ் சல்தானா அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் செப, தவ முயற்சிகளில் பங்கேற்குமாறு அவர் பிற கிறிஸ்தவ சபைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் மதத்தின் அடிப்படையில் பிரிவினைகளும் வன்முறைகளும் தூண்டப்படும் வேளையில், மதம் மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு கருவி என்பதையும் மக்கள் உணர வேண்டும் என்று பேராயர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வறுமை, மக்களிடையே வளர்ந்து வரும் அடிப்படைவாதக் கொள்கைகள், மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் தங்கள் நலனிலேயே கவனம் செலுத்தும் அரசியல் கட்சிகள் இவைகளே நாட்டின் பல்வேறு கொடுமைகளுக்குக் காரணம் என்று பாகிஸ்தான் ஆயர் பேரவையின் சமூகத் தொடர்புப் பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை ஜான் நதீம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.