2011-01-26 15:31:44

வாஷிங்டன் பெருநகரில் நடைபெற்ற உயிர்காப்போர் பேரணியில் கலந்து கொண்ட ஏராளமான இளையோர்


சன.26, 2011. இத்திங்களன்று அமெரிக்காவின் வாஷிங்டன் பெருநகரில் மேற்கொள்ளப்பட்ட உயிர்காப்போர் பேரணியில் ஆயிரக்கணக்கான இளையோர் கலந்து கொண்டனர்.
1973ம் ஆண்டு சனவரி 22ம் நாள் அமெரிக்காவில் கருக்கலைத்தல் சட்டபூர்வமாக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சனவரி 22ம் நாள் உயிர்காப்போர் பேரணி மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாண்டு சனவரி 22 வாரஇறுதியாக இருந்ததால், இத்திங்களன்று இப்பேரணி நடத்தப்பட்டது. கருக்கலைத்தல் சட்டப்பூர்வமாக்கப்பட்டதற்குப் பின் பிறந்த பல ஆயிரம் இளையோர் உட்பட, இப்பேரணியில் 4,00,000 பேர் கலந்து கொண்டனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வழக்கப்படி, இந்தப் பேரணியின் துவக்கத்தில் ஓர் இளையோர் கூட்டமும், திருப்பலியும் இடம்பெற்றன. இவ்வாண்டு இளையோரின் கூட்டம் அதிகமாய் இருந்ததால், ஆறு இடங்களில் திருப்பலி நடைபெற்றதென்று இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.
கத்தோலிக்கக் கல்லூரிகள், உயிர்காக்கும் கொள்கை கொண்ட பிற கல்லூரிகள், இன்னும் பல்வேறு மறைமாவட்டக் குழுக்கள், குடும்பப்பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு தன்னார்வக் குழுக்கள் என்று பல குழுவினர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக வேறொரு செய்திக் குறிப்பு கூறுகிறது.கருக்கலைத்தல் போன்ற உயிரழிக்கும் முயற்சிகள் குறித்த கருத்துக் கணிப்பு ஒன்றும் இந்தப் பேரணியின் போது நடத்தப்பட்டது என்றும், இளையோர் இந்தக் கருத்துக் கணிப்பில் ஆர்வமாய் பங்கேற்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.