2011-01-26 15:01:35

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


சன 26, 2011. இப்புதனன்று உரோம் நகரின் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெற்ற திருத்தந்தை 16ம் பெனடிக்டின் புதன் பொது மறைபோதகமானது இவ்வாண்டின் நான்காவது பொது மறைபோதகமாகும். இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடு, ஜெர்மனி, இஸ்பெயின், சிலே, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3000 திருப்பயணிகள் அம்மண்டபத்தை நிறைத்திருக்க, புனித ஜோன் ஆஃப் ஆர்க் குறித்து இவ்வார புதன் மறைபோதகத்தில் தன் கருத்துக்களை வழங்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

மத்தியகாலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த முக்கிய பெண்மணிகளுள் ஒருவர் புனித ஜோன் ஆஃப் ஆர்க். பக்தி நிறைந்த குடும்பத்தில் வளர்ந்த இவர், தன் இளம் வயதிலேயே மோன நிலை அனுபவங்களைக் கொண்டிருந்தார். திருச்சபையில் நெருக்கடிகளும், இவரின் சொந்த நாடான பிரான்சில் போரும் இடம்பெற்று வந்த அந்தக் காலக்கட்டத்தில், செபம் மற்றும் கன்னிமை வாழ்வுக்கும், தன் தேசத்து மக்களுக்கான விடுதலைப்போரில் தனிப்பட்ட ஈடுபாட்டிற்குமான இறைவனின் அழைப்பை தன் வாழ்வில் உணர்ந்தார் இப்புனிதர். தன் பதினேழாவது வயதில் ஃப்ரெஞ்ச் படையினரிடையே தன் பணிகளைத் துவக்கிய புனித ஜோன் ஆஃப் ஆர்க், இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே நீதியான கிறிஸ்தவ அமைதியை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். Orleans நகரைக் கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்ததோடு Rheimsல் மன்னர் ஏழாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிலும் பங்கேற்றார். அடுத்த ஆண்டே தன் எதிரிகளால் கைது செய்யப்பட்ட இப்புனிதர், திருச்சபை நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, திருச்சபைக்கு எதிர்மறையான கொள்கையைக் கொண்டவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு கம்பத்தில் கட்டப்பட்ட நிலையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். நெருப்பால் வெந்து இறக்கும் தறுவாயிலும் இயேசுவின் பெயரைச் சொல்லியே இறுதி மூச்சை விட்டார் புனித ஜோன் ஆஃப் ஆர்க். இவர் மீதான இந்த அநீதியான இத்தண்டனைத் தீர்ப்பு, 25 ஆண்டுகளுக்குப்பின் மாற்றியமைக்கப்பட்டது. புனித ஜோன் ஆஃப் ஆர்க்கின் ஆன்மீகத்தின் இதயமாக கிறிஸ்துவிலும்,கிறிஸ்துவுக்குமான, மற்றும் திருச்சபைக்கும் அயலாருக்குமான அவரின் மாறாத அன்பு இருந்தது. இறையரசின் பணிக்கென பொதுவாழ்வில் அர்ப்பணிக்கப்பட, புனித ஜோன் ஆஃப் ஆர்க்கின் எடுத்துக்காட்டுகளும் செபமும் ஒவ்வொரு பொதுநிலையினரையும் தூண்டி, கிறிஸ்துவின் மேன்மை நிறை அழைப்பை முழுமையில் வாழ அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக.

இவ்வாறு தன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.