2011-01-25 15:40:56

விவிலியத் தேடல்


RealAudioMP3
23ம் திருப்பாடலின் ஐந்தாம் திருவசனத்தில் காணப்படும் "என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்" என்ற வரியில் நம் தேடலை சென்ற வாரம் ஆரம்பித்தோம். இன்று தொடர்கிறோம். தன் தாய் தன் மீது காட்டிய பாசத்தை, தன் ஆடுகள் மீது தான் காட்டிய பாசத்தை இந்த வரியில் தாவீது சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று சிந்தித்தோம். தான் சிறுவனாய் இருந்தபோது, இறைவாக்கினர் சாமுவேல் தன் தலை மீது எண்ணெய் பூசி, தன்னைத் திருப்பொழிவு செய்ததை, அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை தாவீது இந்த வரியில் அழுத்தமாய் கூறியுள்ளார் என்றும் சிந்தித்தோம். சாமுவேல் முதல் நூல் 16ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்த நிகழ்வை இத்தேடலில் சிறிது ஆழமாகச் சிந்திப்போம். இப்படி சிந்திப்பதால், தைலத்தால் பூசப்படுதல், திருப்பொழிவு செய்யப்படுதல் ஆகிய வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இஸ்ரயேல் மக்களின் முதல் அரசனாய் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சவுல் இறைவனின் விருப்பத்திற்கு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டதால், அவரை இறைவன் ஒதுக்கி விட்டு, புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கும் பணிக்கு இறைவாக்கினர் சாமுவேலை அனுப்புகிறார் பெத்லகேமுக்கு. அங்கு ஈசாய் என்பவரின் புதல்வர்களுள் ஒருவனை தான் அரசனாகத் தெரிவு செய்துள்ளதாக இறைவன் கூறுகிறார். ஆனால், தெரிவு செய்யப்பட்டவர் யார் என்ற பெயரைச் சொல்லாமல் இறைவன் சாமுவேலை அனுப்புகிறார்.
இறைவாக்கினர் சாமுவேல் பெத்லகேம் சென்றதும், ஈசாய் தன் புதல்வர்களை அவருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ஒவ்வொருவரும் ஒரு பெயருடன் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். முதலில் வந்தவர் எலியா. அவரைக் கண்டதும் கடவுள் இவரைத்தான் தேர்ந்திருப்பார் என்று இறைவாக்கினர் தீர்மானிக்க, இறைவன் அவருக்கு முக்கியமான பாடம் ஒன்றைச் சொல்லித் தருகிறார்.
சாமுவேல் - முதல் நூல் 16 : 6-7
சாமுவேல் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார். ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், “அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறக்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் என்றார். 
எலியாவைத் தொடர்ந்து, அபினதாப், சம்மா என்ற பெயர் கொண்ட சகோதரர்கள் சாமுவேலுக்கு முன் வருகின்றனர். இவ்வாறு ஈசாயின் ஏழு புதல்வர்களும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றனர். ஆனால், இறைவன் இவர்கள் யாரையும் தான் தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறுகிறார். இறைவாக்கினர் குழப்பத்தில் மூழ்குகிறார். அதற்குப் பின் அங்கு நடப்பது ஆச்சரியம் தருவதாய் உள்ளது. அந்தப் பகுதியில் நாம் வாசிப்பது இதுதான்:
சாமுவேல் - முதல் நூல் 16 : 11
தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் என்றார். 
ஈசாயின் புதல்வர்கள் அனைவரையும் தனக்கு அறிமுகப்படுத்தச் சொல்லியிருந்தார் இறைவாக்கினர் சாமுவேல். ஆனால், ஈசாய் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த தன் கடைசி மகனை, முற்றிலும் மறந்து விட்டார். அச்சிறுவனின் பெயர்கூட அவருக்கு நினைவில் இல்லாததுபோல் அவர் பேசுகிறார். "உன் பிள்ளைகள் இத்தனை பேர் தானா?" என்று இறைவாக்கினர் அழுத்திக் கேட்கும்போதுதான் ஈசாய் அந்த மகனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறார். “ஓ, மன்னிக்கவும்... மறந்துவிட்டேன்... இன்னொரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்.” என்று பட்டும் படாமல் பேசுகிறார் ஈசாய். அந்த மகனையும் பெயர் சொல்லாமல் அறிமுகப்படுத்துகிறார். குடும்பத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வில் அந்த ஆடு மேய்க்கும் சிறுவனுக்கு பெயரும் இல்லை, பங்கும் இல்லை. இறைவாக்கினர் முன் அறிமுகப்படுத்தும் அளவுக்கு அந்தச் சிறுவன் இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்ற சிந்தனை ஈசாய்க்கு. ஈசாயின் எண்ணங்களும், இறைவாக்கினர் சாமுவேலின் எண்ணங்களும் தவறானவை என்று பாடம் புகட்டும் அளவுக்கு அங்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சாமுவேல் - முதல் நூல் 16 : 12-13
ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்! என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. 
சகோதரர் முன்னிலையில் மட்டுமல்ல, ஆடுமேய்க்கும் அச்சிறுவனைப் பற்றிய நினைவே இல்லாத, அவனது பெயரையே மறந்து போயிருந்த அந்தத் தந்தையின் கண்களுக்கு முன்பாகவும் அச்சிறுவன் திருப்பொழிவு செய்யப்படுகிறான். திருப்பொழிவு முடிந்ததும் நிகழும் ஒரு மாற்றம் என்ன? இதுவரை தனியொரு பெயரில்லாமல் ஆடு மேய்ப்பவன், சிறுவன் என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவன், தாவீது என்ற பெயர் பெறுகிறான். தாவீது என்ற பெயர் முதல் முறையாக விவிலியத்தில் இந்த வரியில் தான் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் விவிலியப் பக்கங்களில், தாவீது என்ற பெயர் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆபிரகாம், மோசே ஆகிய மிகப் புகழ் பெற்ற இரு பெயர்களுக்கு அடுத்தப்படியாக, விவிலியத்தில் ஆயிரம் முறைகளுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பெயர் - தாவீது.
இஸ்ரயேல் மக்களின் தலைசிறந்த மன்னரான தாவீது, விவிலியத்தில் மிகவும் புகழ்பெற்ற ஒரு நாயகனான தாவீது ஒரு பெயர் இல்லாத, ஆடு மேய்க்கும் சிறுவனாக அறிமுகமாகிறார். ஆனால், இறைவாக்கினர் அவர் மீது எண்ணெய் ஊற்றி திருப்பொழிவு செய்ததும் புகழ்பெற்ற தாவீதாக மாறுகிறார். "என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்" என்ற வரியின் முக்கியமான பொருள் இதுதான்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் ஒருவருக்குத் தரப்படும் பெயர் வெறும் அடையாளக் குறியீடு அல்ல. பல அர்த்தங்களை உள்ளடக்கியது. ஒரு சிலரது பெயரில் ஒரு வரலாறே பொதிந்திருக்கும். யாக்கோபுக்கு விண்ணகத் தூதர் தந்த 'இஸ்ரயேல்' என்ற பெயர் வரலாற்றை உள்ளடக்கிய ஒரு பெயர். உன்பெயர் இனி யாக்கோபு எனப்படாது, 'இஸ்ரயேல்' எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்என்றார். (தொடக்கநூல் 32: 28). கடவுளோடும் மனிதரோடும் போராடும் இஸ்ரயேல் மக்களின் வரலாறு இன்றும் தொடர்கிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்ததுதானே. தாவீது என்ற பெயரின் பொருளையும் ஆழத்தையும் அறிந்து கொள்வது நல்லது. தாவீது என்ற பெயருக்கு 'அன்பார்ந்தவர், அன்புகூரப்படுபவர்' என்பது பொருள்.

இஸ்ரயேல் மக்களின் அரசனைத் தெரிவு செய்ய பெத்லகேம் வந்தார் சாமுவேல். எனவே, அவரது பார்வையில், நல்ல உடல் வலிமையோடு மன்னனுக்குரிய அனைத்து தகுதிகளோடும் ஈசாயின் முதல் மகன் எலியா வந்து நின்றதும், இவன்தான் அரசன் என்று அவர் தீர்மானித்தார். ஆனால், இறைவன் சாமுவேலுக்கு வேறு பாடங்கள் சொல்லித் தந்தார். "மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்." (1 சாமுவேல் 16: 7) என்று இறைவன் அவருக்குப் பாடம் சொல்லித் தந்தார். எலியாவையோ, அவனது மற்ற சகோதரர்களையோ தேர்ந்து கொள்ளாத இறைவன் மன்னனுக்குரிய ஒரு தகுதியும் இல்லாத ஆடு மேய்க்கும் ஒரு சிறுவனைத் தேர்ந்து கொண்டது, ஈசாய் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, இறைவாக்கினர் சாமுவேலுக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

விவிலியத்தில் இறைவன் மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் இந்த அதிர்ச்சி நமக்கும் கிடைக்கிறது. தகுதி என்று மனிதப் பார்வையில், உலகத்தின் கண்ணோட்டத்தில் கருதப்படும் எதுவும் இறைவனின் பார்வையில் ஒன்றுமில்லாததாகிவிடும்.
ஆபிரகாம், மோசே என்று ஆரம்பித்து, தாவீது, இறைவாக்கினர்கள், இயேசுவின் சீடர்கள், பவுல் அடியார் என்று ஒவ்வொருவரையும் தகுதி உள்ளவர்கள் என்பதால் இறைவன் தேர்ந்து கொள்ளவில்லை. மாறாக, இறைவன் தேர்ந்து கொண்டதால், அவர்கள் தகுதி பெறுகின்றனர். இயேசுவின் வழியை முற்றிலும் அழித்துவிடும் வெறியுடன் புறப்பட்ட சவுலை இயேசு தெரிவுசெய்தார், வழிமறித்தார். அவரை முற்றிலும் தன்னுடையவராக்கினார். சவுல் பவுலாக மாறியதை ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 ம் நாள் ஒரு திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். பவுல் அடியார், தன் உள்ளத்தைத் திறந்து எழுதும் ஒரு விவிலியப் பகுதி இதோ:
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1: 26-27
சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார்.  
வருகிற ஞாயிறன்று திருப்பலியில் நாம் கேட்கவிருக்கும் இரண்டாம் வாசகத்தின் ஒரு பகுதி இது. தகுதி இருப்பதால் ஒருவர் தேர்ந்து கொள்ளப்படுகிறாரா, அல்லது தேர்ந்து கொள்ளப்படுவதால் ஒருவர் தகுதி பெறுகிறாரா என்ற கேள்விக்கு இறைவன் தரும் பதில்: "மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்." என்பதே.
முகத்தைப் பார்க்காமல் அகத்தைப் பார்த்து இறைவன் தெரிவு செய்வதற்கு காரணங்கள் உண்டு. இறைவன் மனிதர்களைத் தெரிவு செய்வது பதவிகள், பெயர், புகழ் இவைகளுக்காக அல்ல. பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு. சுகமான வாழ்க்கை வாழ்வதற்கல்ல. உலகை, மக்களை வாழ வைப்பதற்கு. இப்பணிகளுக்காக இறைவன் தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் தங்கள் சுய தகுதிகளை, பலத்தை நம்பி வாழக் கூடாது. வாழவும் முடியாது. இந்த உண்மையை ஆணித்தரமாகச் சொல்வதற்கே உலகின் கண்களில் வலுவற்றவர்களை, தகுதியற்றவர்களை இந்த முக்கியப் பணிகளுக்கு இறைவன் தெரிவு செய்கிறார். உலகின் பார்வையில் தகுதி எதுவும் இல்லாத இவர்களிடம் இறைவன் காணும் ஒரே ஒரு தகுதி உண்டு... அவர்கள் அகத்தில் இறைவன் முக்கிய இடம் பெற்றிருப்பதே அந்த தகுதி. இந்த ஒரு தகுதி போதும் இறைவனுக்கு.

தாவீது ஆடுகள் மேய்க்கும் சிறுவனாய் காடு மேடுகளில் அலைந்தபோது, இறைவனின் பராமரிப்பை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இக்கட்டானச் சூழலிலும் உணர்ந்திருந்தார். கடும் வெயிலில், வாட்டும் பசியில், தாகத்தில் தானும் தன் ஆடுகளும் தவித்தபோது, இறைவன் சரியான நேரத்தில் சரியான இடங்களுக்குத் தன்னையும், தன் ஆடுகளையும் அழைத்துச் சென்றதை தாவீது நேரடியாகக் கண்டவர். இறைவனின் பராமரிப்பில் தாவீது கொண்டிருந்த ஆழமான நம்பிக்கை, அவர் தன் ஆடுகளைக் கண் இமைபோல் காத்த பாசம் இவை இரண்டும் தாவீதின் அகத்தில் இருந்த அழகு. அந்த அகத்தின் அழகால் ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீது, அதாவது, 'அன்பார்ந்தவர், அன்புகூரப்படுபவர்' என்ற பெயரைப் பெறுகிறார். அந்த அகத்தின் அழகைக் கண்ட இறைவன், இவரே இஸ்ரயேல் மக்களின் அரசனாகும் தகுதி பெற்றவர் என்று தாவீதைத் தெரிவு செய்கிறார்.
 நம் ஒவ்வொருவரின் அகத்தையும் இறைவன் பார்க்கிறார். நம் தலையை நறுமணத் தைலத்தால் பூசி, நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைக்கிறார். பெருமைப்படுத்துகிறார். இந்த எண்ணங்களில் நம் தேடலைத் தொடர்வோம்.







All the contents on this site are copyrighted ©.