2011-01-25 15:10:04

சூடானின் நிரந்திர அமைதிக்காகச் செபிக்குமாறு சர்வதேச சமுதாயம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது


சன 25, 2011. தென் சூடானின் பிரிவினை குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பின் ஆரம்ப கால முடிவுகள், ஆப்ரிக்காவில் 54வது சுதந்திர நாடு ஒன்று உருவாவதற்கான வாய்ப்புகளை காட்டி நிற்கும் வேளையில், சூடானின் நிரந்தர அமைதிக்காகச் செபிக்குமாறு சர்வதேச சமுதாயத்தை விண்ணப்பித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.

தென் சூடானின் தொம்புரா யாம்பியோ மறைமாவட்டத்தின் ஆயர் Eduardo Hiiboro Kussala உரைக்கையில், நல்லதை நோக்கிய ஒரு மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள் என்றார்.

ஓர் உன்னத முடிவை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நேரத்தில் சர்வதேச சமூகத்தின் செபமும் ஆதரவும் இன்றியமையாதவை என்றார் அவர்.

போர் என்பது தீர்வுக்கான ஒரு வழியாக முடியாது என்பதை அரசு உணர்ந்து கொண்டு அமைதி வழிகளைப் பின்பற்ற முன்வந்திருப்பது சர்வதேச சமுதாயம் மற்றும் பிறரன்பு நிறுவனங்களின் செபம் மற்றும் வற்புறுத்தலாலேயே என்பதையும் கோடிட்டுக்காட்டினார் ஆயர் Hiiboro Kussala.

சூடான் நாட்டிலிருந்து தென்பகுதி தனி நாடாக பிரிந்து செல்வது குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு இம்மாதம் 15ந்தேதியே எடுக்கப்பட்டுள்ள போதிலும், பிப்ரவரி 6ந்தேதி தான் அதன் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.








All the contents on this site are copyrighted ©.