2011-01-25 15:12:27

2010ம் ஆண்டு அதிகமான இயற்கைப் பேரிடர்கள் இடம் பெற்ற ஆண்டு – ஐ.நா.


சன.25,2011. கடந்த இருபது ஆண்டுகளில் கடும் உயிரிழப்புக்களை ஏற்படுத்திய இயற்கைப் பேரிடர்கள் அதிகமாக இடம் பெற்ற ஆண்டுகளில் ஒன்றாக 2010ம் ஆண்டு கணிக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.பேரிடர் தடுப்பு அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இடம் பெற்ற சுமார் 373 இயற்கைப் பேரிடர்களில் 2,96,800 க்கும் அதிகமான மக்கள் இறந்தனர், சுமார் 20 கோடியே 80 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர், சுமார் 11,000 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டது என்று பெல்ஜிய நாட்டு லுவெய்ன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பேரிடர் தடுப்பு ஆய்வு மையம் அறிவித்தது.

UNISDR என்ற ஐ.நா.வின் பேரிடர் தடுப்பு நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்த லுவெய்ன் அலுவலகம், வரும் ஆண்டுகளில் நிலைமை மேலும் மோசமடையாவண்ணம் தடுப்பதற்கு நல்ல தயாரிப்புக்கள் தேவை என்றும் கேட்டுள்ளது.

கடந்த சனவரி 12ம் தேதி ஹெய்ட்டியில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் மட்டும் 2,22,500க்கும் அதிகமானோர் இறந்தனர். இரஷ்யாவில் கோடைகால வெப்பக் காற்று ஏற்படுத்தியப் பேரிடரில் சுமார் 56,000 பேர் இறந்தனர்.

கடந்த ஆண்டில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மொத்த மக்களில் 89 விழுக்காட்டினர் ஆசியாவில் வாழ்பவர்கள் என்றும் அம்மையத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.