2011-01-24 15:19:16

வாரம் ஓர் அலசல் – தழைக்கட்டும் மக்களாட்சி


சன.24,2011. “இலங்கைக் கடற்படை அட்டூழியம்:கழுத்தை இறுக்கி மீனவர் கொலை. தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில், வேதாரண்யம் - கோடியக்கரை அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த முறை துப்பாக்கிச் சூடோ, வலை அறுப்போ நிகழவில்லை. மாறாக குரல்வளையை சுருக்குக் கயிறால் கட்டிக் கடலுக்குள் போட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையின் இதுபோன்றத் தொடர் சம்பவங்கள், தமிழக மீனவர்களிடையே கடும் அச்சத்தையும் நெருக்கடியையும் தோற்றுவித்துள்ளது”. இது, இஞ்ஞாயிறு தமிழ் தினசரி ஒன்றின் முதல் செய்தி. சனநாயக ஆட்சி என்று சொல்லும் ஒரு நாடு இத்தகைய வன்செயல்களைத் தொடர்ந்து நடத்துவது நம்மைக் கவலைப்பட வைக்கிறது. அதேநேரம், இந்தியா, தனது 61வது குடியரசு தினத்தைக் கொண்டாடத் தயாரித்து வரும் இந்நேரத்தில், அச்சத்திலும் நெருக்கடியிலும் குடிமக்கள் தொடர்ந்து வாழ்வது ஒரு சனநாயக அமைப்புக்குச் சரிதானா?

“ஒரு சனநாயகத்தின் முக்கிய கோட்பாடு தனிமனிதனின் மதிப்பும் மாண்புமாகும்” என்று எட்வர்ட் பெல்லாமி என்பவர் சொன்னார். கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டிலோ,

“ஓர் உண்மையான சனநாயகத்தில் ஏழைகள் செல்வந்தரைவிட அதிக வல்லமை கொண்டிருப்பார்கள். அஙகு ஏழைகளே அதிகமாக இருப்பார்கள். மேலும், பெரும்பான்மையினோரின் விருப்பமே மேலானதாக இருக்கும்.”

அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட உழைத்த அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் சொன்னார் “சனநாயகம் என்பது மக்களே, மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி” என்று.

இப்படி, மக்களாட்சி பற்றி பெரியோர்களின் அருமையான கூற்றுக்களை வாசிக்கிறோம். உலகில், இந்நாட்களில் சனநாயகம் அதாவது மக்களாட்சிநிலை எப்படி இருக்கின்றது என்று அலசினால், சூடான் நாட்டின் தென்பகுதி தனிநாடாகப் பிரிந்து செயல்படுவதற்கு ஆதரவாக அப்பகுதியின் 99 விழுக்காட்டு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இந்தச் செய்தி இஞ்ஞாயிறன்று அந்நாட்டு இணையதளத்தில் வெளியாகியது. சூடானில் இம்மாதம் 9 முதல் 15 வரை நடைபெற்ற கருத்து வாக்கெடுப்பில் மக்கள் வெளிப்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பை வட சூடான் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இவ்வாண்டு இறுதியில் தென் சூடான் தனிநாடாகச் செயல்படத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் பெரிய நாடாக இருக்கும் சூடான் அரசுக்கும் தென் சூடான் புரட்சியாளர்க்கும் இடையே இருபது வருடங்களுக்குமேல் இடம் பெற்ற சண்டையில் சுமார் இருபது இலட்சம் பேர் இறந்தனர், சுமார் நாற்பது இலட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். தென் சூடான் மக்களின் சனநாயக வாழ்வுக்கானப் போராட்டத்திற்கு இப்பொழுது விடிவு பிறந்துள்ளது.

மேற்கு ஆப்ரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் கடந்த நவம்பரில் நடந்த சனநாயகத் தேர்தலில் வெற்றி பெற்ற Alassane Ouattara இன்னும் பதவியில் அமரமுடியாத நிலை இருக்கின்றது. ஏற்கனவே பதவியில் இருந்த அரசுத் தலைவர் Laurent Gbagbo அந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுப்பதால் கலவரங்கள் வெடித்தன. அபிஜானில் விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் Ouattara வுக்கு ஐ.நா.அமைதிகாக்கும் படைகள் பாதுகாப்பு அளித்து வருகின்றன. இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்டநிலையால் தற்சமயம் ஒரு நாளைக்கு 600 பேர் வீதம் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் ஓர் இன அழிவே ஏற்படும், வன்முறை வெடிக்கும் என்று ஐ.நா.அதிகாரி Edward Luck எச்சரித்துள்ளார்

அடுத்து, வட ஆப்ரிக்க நாடான டுனிசியாவில் நடைபெற்ற மக்கள் எழுச்சி காரணமாக இம்மாதம் 14ம் தேதி அந்நாட்டு 23 ஆண்டு கால சர்வாதிகாரி Zine el Abidine Ben Ali யின் பதவி வீழ்ந்தது. பென் அலியும் தனது குடும்பத்தோடு சவுதி அரேபியா தப்பிச் சென்றுவிட்டார். சுமார் 25 ஆண்டுகள் வறுமையில் வாழ்ந்த அந்நாட்டினர் தற்சமயம் சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகின்றனர். அதேநேரம், சர்வாதிகாரி பென் அலியோடு தொடர்புடைய எல்லா அதிகாரிகளும் பதவியிறக்கம் செய்யப்பட வேண்டுமென்ற மக்கள் போராட்டம் இத்திங்களன்றும் தொடருகிறது.

1956 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்ற டுனிசியாவில், 1987-ல் ஆட்சியைப் பிடித்து அதிபரானவர் பென் அலி. டுனிசியா அழகுமிகு கடற்கரைகளால் உலக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடு. இந்நாட்டின் வங்கிகள், பயணியர் விடுதிகள் உட்பட பாதிக்கும் மேற்பட்ட கம்பெனிகள் பென் அலி குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. அரசுக்கு இலஞ்சம் கொடுத்து அரசோடு நல்ல உறவை வைத்துக் கொண்டவர்கள் நல்ல வேலைகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றனர். அரசை விமர்சித்த குரல்கள் மௌனமாக்கப்பட்டன. பத்திரிகையாளர்களும் எதிர்கட்சிக்காரர்களும் காணாமற்போயினர், அவ்வப்போது, தொழிற்சங்கங்கள் தடைச்செய்யப்பட்டன. மனித உரிமை மீறல்கள், சித்ரவதைகள் கட்டவிழ்க்கப்பட்டன. “மனிதனால் இயலாத காரியம் ஏதும் இல்லை. மனிதன் மனிதனாய் இருப்பதைத் தவிர” என்பது போல, டுனிசிய நாட்டு புதிய அரசில் ஒவ்வொரு மனிதனும் மனிதனாய், மனித மாண்புடன் நடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுனிசியாவில் இந்த எழுச்சிக்கு வித்திட்டவர் அந்நாட்டு 26 வயது பட்டதாரி இளைஞரான முகமது புவாஸ். இவர், தனது குடும்பத்தைக் காப்பாற்ற, வீதியில் காய்கறி விற்கத் தொடங்கினார். உள்ளூர் காவல்துறை அவரை ஒவ்வொரு நாளும் இலஞ்சம் கேட்டு இம்சித்தது. உரிமம் இல்லாமல் கடை போட்டிருப்பதாக ஒரு பெண் காவல்துறையாளர் முகமதை கடந்த டிசம்பர் 17ம் தேதி மிரட்டியதோடு இழிவான வார்த்தைகளால் திட்டி முகமதுவின் கன்னத்தில் அறைந்திருக்கிறார். இதற்கு எந்த அதிகாரிகளிடமும் நியாயம் கிடைக்கவில்லை. எனவே அதிகார வர்க்கத்துக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, தனது உடலை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டார். உடல் கருகிய நிலையில், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட முகமது, இம்மாதம் 4ம் தேதி காலமானார். இந்தச் செய்தி, டுனிசியாவில் காட்டுத் தீயாகப் பரவியது. கொந்தளித்தனர் டுனிசிய மக்கள். வெடித்தது புரட்சி! வழக்கம்போல் அடக்குமுறை ஆயுதத்தால் மக்களை ஒடுக்க முனைந்த பென் அலி அரசால், இம்முறை வெற்றி பெற முடியவில்லை. 78 உயிர்களைச் சாய்க்க முடிந்ததே தவிர மக்களின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ஓர் அரசு மக்களால் மக்களுக்காக நடத்தப்படும்" போது அதனை மக்களாட்சி, சனநாயகம் என்று சொல்கிறோம். இந்த மக்களாட்சியின் அளவைத் தீர்மானிப்பது மக்களாட்சிச் சுட்டெண் ஆகும். தி எக்கொனொமிஸ்ட் இதழ் (The Economist Intelligence Unit) 2010ம் ஆண்டின் சனநாயக நிலவரத்தை வெளியிட்டுள்ளது. இதன்படி 167 மக்களாட்சி நாடுகளில் அவ்வாட்சி சிறப்பாக நடைபெறும் நாடாக நார்வே முதலிடத்தைப் பெற்றுள்ளது. மக்களாட்சிச் சுட்டெண்ணின் மொத்தமான 10 புள்ளிகளில் 9.80 புள்ளிகள் நார்வேக்குக் கிடைத்துள்ளது. வடகொரியா 1.08 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தைப் பெற்றுள்ளது. இம்மாதிரியானப் புள்ளிகள் 2006ல் முதலில் வெளியிடப்பட்டன. அதன் பின்னர் 2008ல் வெளியிடப்பட்டது. அப்போது முதலிடத்தில் இருந்த சுவீடன் தற்போது நான்காம் இடத்துக்கு வந்துள்ளது.

பழங்கால கிரேக்க உரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப்போர், பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.

கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுவதைப் போன்று "மக்களாட்சி என்பது பலருடைய அரசாகும்". அரிஸ்டாட்டில் சொல்வதைப் போன்று “மக்களாட்சி என்பது ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி”யாகும். ஆனால் நாடுகளில் தொடர்ந்து ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். “ஏழையின் கண்ணீர் கூரிய வாளை ஒத்தது” என்பார்கள். இன்று இந்திய சனநாயகத்தில் வெங்காயத்தை உரிக்கும்போது கண்ணீர் வருவதற்கு பதிலாக, வெங்காயத்தின் விலையை கேட்கும்போதே, தாரை, தாரையாக கண்ணீர் வருகிறது என்று சாமான்யர்கள் புலம்புகிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில் 70 இலட்சம் பேர் வேளாண்மையைக் கை கழுவியிருக்கிறார்கள். 2009ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட சுமார் 1,27,151 பேரில் 17,368 பேர் விவசாயத்தோடு தொடர்புடையவர்கள். விவசாயி, ஏழையின் முதல் மனிதனாய் ஆகி வருகிறான். அதேசமயம், கர்நாடகாவில் பா.ஜ., நடத்திய, "பந்த்' காரணமாக, 2,000 கோடி ரூபாய் இழப்பு என்று தொழில் துறையினர் இத்திங்களன்று கவலை தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தும், நிதி ரீதியான குற்றங்கள் புரிந்தும், சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பணத்தைப் போட்டவர்கள் பற்றிய விவரங்கள், 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் தெரிய வருமாம்.இலங்கையில் போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள் நீதி கேட்கின்றனர், தங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அரசைக் கோருகின்றனர். எனவே நாடுகளில் ஏழைகளின் துயர் துடைக்கும் சனநாயகம் அமைவது எப்போது?

ஒரு சமயம் ஓர் ஏழையின் செருப்புகளை விளையாட்டாக ஒளித்து வைத்த மகனை அழைத்துத் தந்தை சொன்னார்... ''மகனே! செருப்புகளை இருந்த இடத்தில் முன் போல வை. வேர்க்க வியர்க்கப் பணி முடித்து வந்த பின்பு, தன் செருப்புக் காணவில்லை என்றால், அந்த உழைப்பாளியின் மனம் என்ன பாடுபடும் என்பதை யோசித்துப் பார்! மாறாக, அவர் தன் செருப்புகளுக்குப் பக்கத்தில் ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கண்டால் எத்தனை மகிழ்ச்சி அடைவார்! அடுத்தவர்களை எதிர்பாராத மகிழ்ச்சிக்கு ஆளாக்கிப் பார்ப்பதில் இருக்கும் இனிமை, அவர்களை பயப்பட வைப்பதிலோ, பதற்றப்பட வைப்பதிலோ இல்லை என்பதை உணர்ந்து கொள்!'' என்று சொல்லி, பத்து ரூபாயைக் கொடுத்து, அந்தச் செருப்புகளுக்குப் பக்கத்தில் வைக்கச் சொன்னார்.

அன்பர்களே, பொதுவாக, ஒரு நாட்டின் வளர்ச்சியை அதன் 'மொத்த தேசிய வருமானம்’ கொண்டுதான் மதிப்பீடு செய்யப்படுகிறது. ஆனால் பூட்டான் என்ற சிறிய, அழகான, அமைதியான நாடு சொன்னதாம் - 'எங்களுக்கு மொத்த தேசிய வருமானம் முக்கியமல்ல, மொத்த மகிழ்ச்சிக் குறியீடுதான் முக்கியம்’ என்று. ஆம். எல்லாரும் இன்புற்றிருப்பதுதானே மக்களாட்சி, எல்லாரும் அமைதி, ஆனந்தம், நிம்மதி இவற்றில் தவழ்வதுதானே சனநாயகம். தீண்டாமை, கல்லாமை, இல்லாமை ஆகியவை அகன்று சமய நல்லிணக்கம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமை இவை தழைப்பதுதானே சனநாயகம்!








All the contents on this site are copyrighted ©.