2011-01-24 15:15:50

திருத்தந்தை, ஜெர்மனியின் லூத்தரன் சபைப் பிரதிநிதிகள் சந்திப்பு


சன.24,2011. லூத்தரன் கிறிஸ்தவர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே இதுவரை இடம் பெற்றுள்ள உரையாடல்களின் பலன்கள் இத்தகைய உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு ஊக்கம் அளிப்பதாய் இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்

உரோமையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை நிறைவு செய்வதற்காக வந்திருக்கும் ஜெர்மனியின் இவாஞ்சலிக்கல்-லூத்தரன் ஐக்கிய அமைப்பின் பிரதிநிதிகளை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் மத்தியில் நிலவும் பிரிவினைகள் கிறிஸ்து விரும்பிய திருச்சபையின் முழுமையான வாழ்வுக்குத் தடங்கலாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

மார்ட்டின் லூத்தரின் கொள்கைத் திரட்டுகள் வெளியிடப்பட்டதின் 500ம் ஆண்டு 2017ம் வருடம் இடம் பெறுவதைச் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, லூத்தரன் கிறிஸ்தவரும் கத்தோலிக்கரும் உலகளாவியக் கிறிஸ்தவ ஒன்றிப்பு நடவடிக்கைக்குத் தங்களை அர்ப்பணிப்பதற்கு இது நல்ல வாய்ப்பாக அமைகின்றது என்றார்.

அச்சமயத்தில் இவ்விரண்டு சபைகளும் ஒருவர் மற்றவருக்கு இழைத்தத் தவறான செயல்களுக்கு கிறிஸ்துவிடம் மன்னிப்புக் கேட்பது நமது உருக்கமான செபமாக இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

லூத்தரன் சபையைத் தொடங்கிய மார்ட்டின் லூத்தர் உரோமைக்கு வந்ததன் 500ம் ஆண்டின் நிறைவாக இந்த லூத்தரன் சபை பிரதிநிதிகள் குழு வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது.

கத்தோலிக்கக் குருவாகவும் இறையியல் பேராசிரியருமாக இருந்த ஜெர்மானியரான மார்ட்டின் லூத்தர், 1517ம் ஆண்டில் 95 கொள்கைத் திரட்டுகளை வெளியிட்டார். அதைத் திரும்பப் பெறுமாறு 1520ல் அப்போதைய திருத்தந்தை பத்தாம் சிங்கராயரும் 1521ல் புனித உரோமைப் பேரரசராகிய ஐந்தாம் சார்லசும் கேட்டுக் கொண்டனர். ஆனால் லூத்தர் அதற்கு இணங்காததால் அவர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து நீக்கப்பட்டார். இதுவே புராட்டஸ்டாண்ட் சீர்திருத்தத்திற்கு வித்திட்டது. கடவுளின் மீட்பை ஒருவர் தனது நல்ல செயல்களிலிருந்து பெறுவதில்லை, மாறாக அது இயேசு பாவத்திலிருந்து மீட்கிறார் என்ற அவரின் மீதான விசுவாசத்தின் வழியாக அது கடவுள் அருளால் இலவசமாக்க கொடுக்கப்படுகிறது என்று மார்ட்டின் லூத்தர் போதித்தார். இவரது போதனை திருத்தந்தையின் அதிகாரத்துக்குச் சவால் விடுப்பதாக இருந்தது.








All the contents on this site are copyrighted ©.