2011-01-24 15:16:48

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவிகளை திரட்டி வருகிறது தலத்திருச்சபை.


சன 24, 2011. இலங்கையில் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளுக்கு கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் விடுத்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து 12இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நிதியையும் பொருட்களையும் திரட்டி கர்தினாலிடம் வழங்கியுள்ளது அந்நாட்டின் பம்பலபிட்டியா பங்குத்தளம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பள்ளி மற்றும் வீடுகட்டும் திட்டங்களுக்கும், பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எனத் திரட்டப்பட்டுள்ள இத்தொகையிலிருந்து ஒரு இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து தொள்ளாயிரம் ரூபாயை திரிகோணமலை பட்டிகோலா ஆயர் கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளையிடம் வழங்கினார் கர்தினால் ரஞ்சித். பட்டிகோலா அம்பாரா பகுதிகளில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென வழங்குவதற்கென 549 கிலோ உணவுப்பொருட்களும் ஆயரிடம் அளிக்கப்பட்டன.

இதற்கிடையே, நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்த மூன்று இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும், முகாம்களிலிருந்து திரும்பி வந்துள்ள ஒரு இலட்சத்து தொண்ணாறாயிரம் பேருக்கு பாதுகாப்பும் உதவிகளும் தேவைப்படுவதாகவும் அறிவித்துள்ளது JRS எனும் அகதிகளுக்கான இயேசு சபை அமைப்பு. தமிழர் பகுதிகளில் இருந்து வரும் ராணுவ ஆக்ரமிப்பு எப்போது விலக்கப்படும் என்ற எவ்வித உறுதியான தகவலும் மக்களுக்கு வழங்கப்படவில்லை எனக்கூறும் இயேசு சபை அமைப்பு, இலங்கை அரசின் வரவு செலவுப் பட்டியலில் ராணுவச்செலவே முதலிடம் பெறுவதாகவும், புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வுக்கென அரசு செலவழிக்கும் தொகை மிகக்குறைவாகவே உள்ளதாகவும் கவலையை வெளியிட்டது.

மேலும், இலங்கையின் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 5கோடியே 10 இலட்சம் டாலர் உதவிக்கு ஐ.நா. நிறுவனம் விண்ணப்பித்திருக்க, இவ்வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள இழப்பு 50 கோடி டாலர்கள் என கணக்கிட்டுள்ளது இலங்கை அரசு.








All the contents on this site are copyrighted ©.