2011-01-22 15:53:40

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் : கிறிஸ்தவத் திருமணத்தில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு மட்டுமே திருச்சபையில் திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது


சன.22,2011. உண்மையானத் திருமணத்தில் நம்பிக்கை வைப்பவர்களுக்கு மட்டுமே திருச்சபையில் திருமணம் செய்வதற்கு உரிமை உள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

தம்பதியர் மற்றும் அவர்களது குழந்தைகளின் எதிர்காலத்தின் ஒருங்கிணைந்த மனித மற்றும் கிறிஸ்தவக் கூறுகளின் நன்மையை உண்மையாக்குவதன் ஒரு செயலாக திருச்சபையில் திருமணம் செய்வது இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இதிலிருந்தே கிறிஸ்தவத் திருமணத்திற்கானத் தயாரிப்பு, திருமண முறிவுகளைத் தவிர்ப்பது ஆகியவற்றின் முக்கியத்துவம் வருகின்றது என்றும் அவர் கூறினார்.

நீதித்துறை ஆண்டின் தொடக்கமாக, Roman Rota எனப்படும் திருச்சபையின் உச்சநீதிமன்ற உறுப்பினர்களை இச்சனிக்கிழமை வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

உண்மையில், வாழும் திருமணம், சட்டத் திருமணம் என்று இருவிதங்கள் கிடையாது மாறாக, ஒரேயொரு திருமணமே உள்ளது, அது, தாம்பத்திய வாழ்வு மற்றும் அன்பின் உண்மையான கூறுகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான உண்மையான சட்டரீதியான பிணைப்பைக் கொண்டது என்றும் அவர் கூறினார்.

தம்பதியரால் கொண்டாடப்படும் திருமணம் ஒரே இயல்பையும் மீட்புத்தன்மையையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், திருமணத் தயாரிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக் கூறினார்

திருமணத் தயாரிப்பில் ஈடுபடுவது ஒரு சிறப்பு மேய்ப்புப்பணி என்றும் திருமணத்திற்கான அழைப்பை ஒருவர், மனிதனாக, கிறிஸ்தவனாக உண்மையின் முன்னால் முழு பொறுப்புடன் ஏற்க உதவுவதாக ஒரு குருவின் நட்புணர்வுடன்கூடிய தயாரிப்பு உதவிகள் இருக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.