2011-01-21 15:57:25

பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு, தலத்திருச்சபை வரவேற்பு


சன.21,2011: இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலியக் கிறிஸ்தவப் பாதிரியாரும் அவரது இரு மகன்களும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுள்ளது இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை.

இந்த வழக்கில் தாரா சிங் என்பவருக்கு உயர் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் இவ்வெள்ளியன்று உறுதி செய்திருக்கிறது. அதேசமயம், ஒரு மதம், மற்ற மதத்தைவிட மேலானது என்ற நோக்கில் மக்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதை நியாயப்படுத்த முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இந்திய ஆயர் பேரவைப் பேச்சாளர் அருட்திரு பாபு ஜோசப், இந்தத் தீர்ப்பானது, இத்தகைய வன்செயல்கள் எதிர்காலத்தில் இடம்பெறாவண்ணம் இருப்பதற்கு உதவும் என்று கூறினார்.

அதேசமயம், மதமாற்றம் குறித்த உச்ச நீதிமன்றக் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்றும், கிறிஸ்தவர்களே கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற உணர்வை இது வெளிப்படுத்துகின்றது என்றும கூறினார் அருட்திரு பாபு ஜோசப்.

கட்டாய மதமாற்றங்கள், மதமாற்றங்களே அல்ல என்பதில் திருச்சபை எப்பொழுதும் உறுதியாக இருக்கிறது என்றுரைத்த அக்குரு, கத்தோலிக்கத் திருச்சபை நாட்டின் அரசியல் அமைப்பின்படி எப்பொழுதும் செயல்படுகிறது என்றார்.

1999ம் ஆண்டு சனவரி 22ம் தேதி ஒரிசா மாநிலத்தின் மனோகர்பூர் என்கிற கிராமத்தில் உள்ள ஆலயத்துக்கு வெளியே ஒரு வேனில் தூங்கிக் கொண்டிருந்த பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவரது இரு மகன்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தாரா சிங் உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.