2011-01-20 14:54:16

லெபனனின் புதிய அரசு அனைத்து மக்களின் நன்மைக்காக உழைக்கும், கத்தோலிக்கத் தலைவர்கள் நம்பிக்கை


சன.20,2011. லெபனன் அரசு கவிழ்ந்துள்ளதைத் தொடர்ந்து அந்நாட்டில் அமையவுள்ள புதிய அரசு அனைத்து லெபனன் மக்களின் நன்மைக்காக உழைக்கும் என்ற தங்களது நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கத் தலைவர்கள்.

தற்போது லெபனனில் அரசு மாற்றப்பட்டிருப்பதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம் என்றுரைத்த சிரிய நாட்டின் தமாஸ்கஸ் மெல்கிக்தே ரீதி கத்தோலிக்க முதுபெரும் தலைவர் மூன்றாம் Gregoire Laham, பல அரபு நாடுகள் கிளர்ச்சியும் துன்பமும் நிறைந்த நிலைகளை எதிர்நோக்குகின்றன, இந்நிலை லெபனனைத் தாக்காதவாறு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

லெபனனின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் இந்நிலையைக் களைவதற்கு அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ள முதுபெரும் தலைவர் Laham, லெபனனின் புதிய அரசு, அந்நாட்டின் நல்லிணக்கத்தின் தனித்துவத் தன்மையைக் காக்குமாறு கேட்டுள்ளார்.

லெபனனின் சுமார் 41 இலட்சம் மக்களில் சுமார் 39 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். அந்நாட்டின் அதிகாரப்பகிர்வு அமைப்பின்படி அரசுத்தலைவர் மாரனைட் ரீதிக் ிகத்தோலிக்கராகவும் பிரதமர் சுன்னிப்பிரிவு முஸ்லீமாகவும் நாடாளுமன்றப் பேச்சாளர் ஷியைட் முஸ்லீமாகவும் இருக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.