2011-01-20 14:35:25

சனவரி 21 - வாழ்ந்தவர் வழியில்


“அவனுக்கு வாய்க் கொழுப்பு அதிகம், கொழுப்பு சாஸ்தி” என்று, அளவுக்கு அதிகமாய்ப் பேசுபவர் பற்றிப் பொதுவாகச் சொல்வதுண்டு. ஆனால் மனிதனின் உடம்பில் இந்தக் கொழுப்புச் சத்து, நன்மை செய்யும் கொழுப்புகள், தீமை செய்யும் கொழுப்புகள் என்று இருவகை உள்ளன. தீமை செய்யும் கொழுப்புகள் அதிகமாகும்போது அது உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு சத்துத் தேவைப்படுகிறது. அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. இந்தக் கொழுப்புச் சத்து குறித்தக் கண்டுபிடிப்பு ஒன்றிற்கு நொபெல் மருத்துவ விருது பெற்றவர் Konrad Emil Bloch. ஜெர்மானிய அமெரிக்க உயிர்வேதியியல் நிபுணரான இவர் 1964ம் ஆண்டு Feodor Lynen ன் சேர்ந்து நொபெல் மருத்துவ விருது பெற்றவர். கொழுப்புப்படிவு ஆக்ஸைடு மாறுபாடுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த இவர்களின் கண்டுபிடிப்புக்கு நொபெல் மருத்துவ விருது கிடைத்தது. Bloch 1912ம் ஆண்டு சனவரி 21ம் தேதி ஜெர்மனியின் Neisse வில் நடுத்தரவர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். 1930 முதல் 1934 வரை மியூனிச் தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் வேதியியல் படித்தார். யூதர்கள் ஹிட்லரின் நாத்சி கொள்கையால் அடக்குமுறைக்கு உள்ளான போது 1934ல் இவர் சுவிட்சர்லாந்து சென்றார். பின்னர் 1936ல் அமெரிக்க ஐக்கிய நாடு சென்றார். 1938ல் கொலம்பியப் பல்கலைகழகத்தில் உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். தனது 88வது வயதில் 2000ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.