2011-01-19 14:46:48

மியான்மாரில் அதிகமான சமய சுதந்திரம் வழங்கப்பட யான்கூன் பேராயர் அழைப்பு


சன.18,2011: உலகில் மிகுந்த அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் நாடுகளுள் ஒன்றான மியான்மாரில் அதிகமான சமய சுதந்திரம் வழங்கப்படுமாறு அந்நாட்டு யான்கூன் பேராயர் சார்லஸ் போ அழைப்பு விடுத்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்வாண்டு உலக அமைதி தினச் செய்தியில் உலக அரசு அதிகாரிகளுக்கு விடுத்துள்ள செய்தி பற்றிக் குறிப்பிட்ட பேராயர் போ, ஒவ்வொரு மனிதனும் தனியாகவும் குழுமமாகவும் தனது மத நம்பிக்கையைப் பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சுதந்திரமாகச் செயல்படுத்தவும் அதனை வெளிப்படுத்தவும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

கிறிஸ்தவர்கள் பணிகளில் பதவி உயர்வு கிடைப்பதற்காகக் கட்டாயமாகத் தங்கள் மதத்தைக் கைவிடுகிறார்கள் என்பதைக் கவலையுடன் தெரிவித்த யான்கூன் பேராயர், நாட்டின் சில பகுதிகளில் ஆலயங்களிலிருந்து சிலுவைகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றார்.

வத்திக்கான் புள்ளி விபரங்களின்படி மியான்மாரின் சுமார் 5 கோடியே 34 இலட்சம் மக்களில் 1.2 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

மேலும் அந்நாட்டில் 89 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 4 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். 1962ம் ஆண்டு முதல் அந்நாட்டில் இராணுவ ஆட்சி இடம் பெற்று வருகிறது. 8 இலட்சம் குடிமக்கள் கட்டாயத் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று 2005ல் உலக தொழில் நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருந்தது







All the contents on this site are copyrighted ©.