2011-01-19 12:39:19

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


சன 19, 2010. ஒவ்வோர் ஆண்டும் சனவரி 18 முதல் 25 வரை உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஐக்கிய வாரத்தின் இவ்வாண்டுக் கொண்டாட்டங்கள் குறித்து தன் புதன் பொதுமறைபோதகத்தில் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான இந்தச் செபவாரத்தில், முழு ஐக்கியம் எனும் கொடைக்காகச் செபிக்குமாறு இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் அழைப்புப் பெற்றுள்ளார்கள். 'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' என்ற இந்தச் செபவாரத்திற்கானக் கருத்தானது, ஆதிகாலத் திருச்சபையின் வாழ்வில் காணப்பட்ட ஐக்கியத்தின் நான்கு தூண்கள் குறித்து ஆழமாக சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. திருத்தூதர்களால் எடுத்துரைக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு விசுவாசமாக இருப்பது முதலாவதாகும். இரண்டாவதானது, சகோதரத்துவ ஐக்கியம். அதாவது அக்காலக் கிறிஸ்தவர்களிடையே வளர்ந்து வந்த கிறிஸ்தவ நட்புணர்வின் வெளிப்பாடு. மூன்றாவதாக வருவது, அப்பத்தைப் பிட்டுப் பகிர்வது. ஒரே திருப்பலி மேடையில் பகிர முடியாமல் கிறிஸ்தவர்கள் பிரிந்து வாழும் நிலையானது, கிறிஸ்து தன் திருத்தூதர்களிடையே ஆவல் கொண்ட ஐக்கியத்திலிருந்து நாம் வெகுதூரத்தில் இருக்கிறோம் என்பதை நினைவுறுத்தி நிற்கின்றது. இது நாம், ஐக்கியத்திற்கான அனைத்துத் தடைகளையும் அகற்றுவதற்கு மேலும் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கானத் தூண்டுதலாகவும் உள்ளது. இறுதியாக, நாம் வானகத்தந்தையின் குழந்தைகள் என்பதையும், நாம் மன்னிப்பிற்கும் ஒப்புரவிற்கும் அழைக்கப்பட்டுள்ளோம் என்பதையும் உணர செபம் நமக்கு உதவுகிறது. கிறிஸ்துவின் திருச்சபையின் மீட்பு ஐக்கியத்திற்குள் அனைவரும் வந்துசேர உதவும் வண்ணம், அனைத்துக் கிறிஸ்தவர்களும் நற்செய்திக்கான விசுவாசத்திலும், சகோதரத்துவ ஐக்கியத்திலும், மறைபரப்பு ஆர்வத்திலும் வளர வேண்டும் என இவ்வாரத்தில் செபிப்போம் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை. RealAudioMP3

இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய பாப்பிறை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.