2011-01-18 14:39:14

விவிலியத் தேடல்


சன.18,2011. RealAudioMP3 நம் இல்லங்களில் நாம் காணக்கூடிய ஒரு காட்சி இப்போது என் மனதில் தெரிகிறது. அம்மா தரையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன் பள்ளிக்குச் செல்லும் மகள் அமர்ந்திருக்கிறாள். மகளின் தலையில் கொஞ்சமாய் எண்ணெய் தேய்த்து, அவளது முடியைச் சீப்பால் வாரி, சிக்கல்களைப் பொறுமையாய்ப் பிரித்து, வகிடெடுத்து, சடை பின்னி, முடிவில் ஒரு பூச்சரத்தையும் தலையில் சூடுகிறார் தாய். தாயின் பாசத்தை வெளிப்படுத்தும் இந்தக் காட்சி இன்றைய அவசர உலகில் நடக்கிறதா என்ற கேள்விகள் மனதில் எழலாம். ஆனால், இந்தக் காட்சியை இன்று நம் மனக்கண் முன் கொண்டு வருகிறது திருப்பாடல் 23. இத்திருப்பாடலின் ஐந்தாம் திருவசனத்தில் சொல்லப்பட்டுள்ள "என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்ற வரியை வாசித்ததும் என் மனதில் முதலில் எழுந்த பாசக் காட்சியைத் தான் இப்போது பகிர்ந்து கொண்டேன்.

இந்த வரியை நாம் பல்வேறு கோணங்களில் சிந்திக்கலாம்:


இப்படி பல கோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டும் இந்த வரியில் நம் தேடலை இன்று ஆரம்பிக்கிறோம்.

தலைவாரி, பூச்சூடி தன் குழந்தையைப் பள்ளிக்கு வழியனுப்புவது தாயன்பை வெளிப்படுத்தும் பல செயல்களில் ஒன்று. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட எந்தத்தாயும் கைவசம் வைத்திருக்கும் ஒரு வீட்டு மருந்து எண்ணெய். பலவகை எண்ணெய்கள். உடல் நலத்திற்கும், அழகுக்கும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எந்தெந்த எண்ணெய் எந்தெந்த நோய்க்கு மருந்து என்பதையும் தாய் அறிந்து வைத்திருப்பார்.

தைலம் பூசும் தாயின் பாசத்தைத் தாவீதும் தன் வாழ்வில் உணர்ந்திருப்பார். ஆடுகளை மேய்த்துக்கொண்டு, பகல் முழுவதும் வெயிலில் சுற்றித் திரிந்த சிறுவன் தாவீது, மாலையில் வீடு திரும்பியதும் பரட்டையாய் இருக்கும் அவனது தலைமீது, புழுதி படிந்த அவன் உடல்மீது அவனது தாய் எண்ணெய் பூசியிருக்கலாம். தாய் தன்மீது தேய்த்த அந்த தைலத்தின் மணம், அப்போது வெளிப்பட்ட தாயின் கரிசனை, பாசம் இவைகளை இவ்வரியில் தாவீது நமக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் எண்ணெய், தைலம் ஆகியவை முக்கிய இடம் பெற்றவை. ஒவ்வொரு நாள் வாழ்விலும், விழாக்காலங்களில் நடைபெறும் சடங்குகளிலும் பலவகைத் தைலங்கள் பயன்படுத்தப்பட்டன.

"என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்று தன் ஆயனை நோக்கி தாவீது இவ்வரியைக் கூறும் போது, தன் மூதாதையர் பலர் நறுமணத் தைலத்தால் பூசப்பெற்ற பல முக்கிய நிகழ்வுகளைத் தாவீதின் மனம் நினைத்திருக்கும். தான் சிறுவனாய் இருக்கும்போதே, இறைவாக்கினர் சாமுவேல் தன் தலைமீது எண்ணெய் ஊற்றியதை தாவீது இந்த வரியில் நினைவு கூர்ந்துள்ளார். தாவீதின் மனதில் ஆழமாய் பதிந்திருந்த அந்த நிகழ்வை சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்:

சாமுவேல் - முதல் நூல் 16 : 1, 4, 10 -13

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன். ஏனெனில அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய்” என்றார். ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து, பின் பெத்லகேமுக்குச் சென்றார்... ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். “இவர்களை ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை” என்றார் சாமுவேல். தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, “உன் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா?” என்று கேட்க, “இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான்” என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் “ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன்” என்றார். ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் “தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்!” என்றார். உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகோதரர் முன்னிலையில் அவனைத் திருப்பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது.

தன் மீது இறைவாக்கினர் சாமுவேல் எண்ணெய் பூசியதால் தன் வாழ்வே மாறியதை எண்ணிப்பார்த்தார் தாவீது. அதே வேளையில், அவர் மனதில் வேறொரு காட்சியும் விரிந்திருக்கும். ஆடுகளின் தலையில் ஆயன் எண்ணெய் பூசும் காட்சி.

ஆடுகள் - ஆயன் என்ற உறவு திருப்பாடல் 23ன் முதல் நான்கு திருவசனங்களில் இருந்ததென்றும், ஐந்தாம் திருவசனம் முதல் ஆடுகள் மனிதர்களாக மாறினர், ஆயன் விருந்து படைத்து, தலையில் தைலம் பூசும் வீட்டுத் தலைவனாக மாறினார் என்றும் சிந்தித்தோம். இத்திருப்பாடலின் ஒரு சில விரிவுரையாளர்கள் பாடல் முழுவதிலும் ஆடுகள் - ஆயன் என்ற உருவகத்தை, உறவை வைத்தே இறுதி வரை விளக்கங்கள் தந்துள்ளனர். "என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்ற இந்த வரியை ஆடுகள் - ஆயன் என்ற கோணத்திலிருந்து நாம் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட தாய் பயன்படுத்தும் ஒரு மருந்தாக வீட்டில் எப்போதும் எண்ணெய் இருக்கும் என்று சிந்தித்தோம். குழந்தைகளின் தேவைகள் எப்போதும் வார்த்தைகளில் வெளிப்படுவதில்லை. சிறப்பாக, பேசும் நிலைக்கு வருவதற்கு முன், பலநேரங்களில் அழுகை மட்டுமே குழந்தையின் தேவையைச் சொல்லும் மொழியாக இருக்கும். அந்த அழுகை பலவிதமாய் ஒலிக்கும். அவைகளைத் தாய் அறிந்திருப்பார். பசியால் குழந்தை அழும்போது, தாய் பாலூட்டுவார், அல்லது உணவூட்டுவார். வலியால் குழந்தை அழும்போது வலிதீர்க்கும் சிகிச்சைகளைத் தருவார். வலி தீர்க்கும் ஒரு மருந்து எண்ணெயாகவும் இருக்கும். பூச்சிகள் கடித்த வலியென்றால், காயம்பட்ட வலியென்றால் எண்ணெய் பூசப்படும். வயிற்றில் வலியென்றால், எண்ணெய் ஊட்டப்படும்.

ஒரு சில இல்லங்களில் செல்லப் பிராணிகள் மீது காட்டப்படும் அக்கறை தாய் குழந்தை பாசத்தை ஒத்ததாக இருக்கும். இந்தச் செல்லப் பிராணிகளும் தங்கள் தேவைகளை வார்த்தைகளால் சொல்வதில்லை. அவை எழுப்பும் ஒலிகள் அல்லது அவை நடந்து கொள்ளும் விதம் இவைகளை வைத்து அவற்றின் தேவைகள் புரிந்து கொள்ளப்படும், நிறைவு செய்யப்படும்.

ஆடுகளின் ஒவ்வொரு தேவையையும் நிறைவு செய்வது ஆயனின் பொறுப்பு. தங்கள் தேவைகளை ஆடுகள் கூறும் வழிகளையும் ஆயன் அறிந்திருக்க வேண்டும். ஆடுகளின் பசியறிந்து, பசும் புல்வெளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; தாகம் அறிந்து, நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்; ஆடுகள் சோர்வடையும் போது, அவைகள் இளைப்பாற பாதுகாப்பான இடங்களை உருவாக்க வேண்டும்.

ஆடுகளின் பாதுகாப்பு என்று சிந்திக்கும் போது, அவைகளைத் தாக்க வரும் மிருகங்களான சிங்கம், புலி, ஓநாய் என்றே நம் மனம் எண்ணிப்பார்க்கும். சில சமயங்களில் பெரும் மிருகங்களின் தாக்குதல்களிலிருந்து ஆடுகளைக் காத்துவிடும் ஆயன், சிறு பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து ஆடுகளைக் காக்கமுடியாமல் திணறிப் போவதும் உண்டு.

"என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்ற இந்த வரிக்கு விளக்கம் சொல்லும் Captain Moy Hernandez Jr. என்பவர், பூச்சிகளின் தாக்குதல்களை இந்த வரியுடன் இணைத்து சிந்திக்கிறார். ஒரு சில பூச்சிகள் ஆடுகளின் கண்களைத் தாக்கும். ஒரு சில நுண்ணிய பூச்சிகள் மூக்கு, காதுகள் வழியாக தலைப் பகுதியில் நுழைந்து விடும் ஆபத்தும் உண்டு. அப்போது அந்த ஆடுகள் செய்வதறியாது கத்தும், தலையை ஒரு மரத்தில் அல்லது பாறையில் அடிக்கடி உரசும். ஆடுகள் இவ்விதம் நடந்து கொள்ளும்போது, ஆயன் அவைகளை உடனடியாக உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையேல் இந்தச் சின்ன பூச்சிகள் மூளைக்குள் புகுந்து ஆடுகளின் மரணத்திற்கும் காரணமாகலாம். இந்த நேரங்களில் ஆயன் ஆடுகளின் தலையில் எண்ணெய், தைலம் பூசுவார்... மூலிகைகள் கலந்த எண்ணெய் பூசப்பட்ட ஆடுகள் இந்தச் சிறு எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்படும். "என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்ற இந்த வரியை தாவீது எழுதிய போது, தன் ஆடுகளின் தலை மீது எண்ணெய் பூசி அவற்றைத் தான் பாதுகாத்ததையும் எண்ணிப் பார்த்திருப்பார் என்கிறார் Captain Hernandez.

தலையில் எண்ணெய் பூசி, சின்னச் சின்ன எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து ஆயன் தன் ஆடுகளைக் காக்கும் இந்தச் சிகிச்சை நமக்குப் பாடங்களைச் சொல்லித் தருகின்றன. பெரிய வண்டுகள் நம்மைத் தாக்கும் நேரத்தில், அவைகளை நாம் விரட்டலாம், அல்லது அவைகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வழியைத் தேடலாம். ஆனால், தலையைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களை விரட்டுவது பல சமயங்களில் கடினமாகி விடும். அதேபோல், நமது சிந்தனையைப் பெருமளவில் தாக்கும் எதிர்மறையான எண்ணங்களை நாம் சமாளித்து விடலாம். ஆனால் சிறிது சிறிதாக நம் சிந்தனையை, வாழ்வைப் பாதிக்கும் எண்ணங்களை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம்.

எதிர்மறையான எண்ணங்கள், பழக்கங்கள் ஒரே நேரத்தில் பெரிதாக நம்மை வந்து தாக்குவது கிடையாது. சிறிது, சிறிதாகத் தான் அவை நம் சிந்தனையில், வாழ்வில் இடம் பிடிக்கின்றன. நம்மைத் தாக்கியுள்ள இந்த தீமைகள் என்னெவென்று புரியாமல், அவைகளைச் சொல்லத் தெரியாமல் குழந்தைகளைப் போல், ஆடுகளைப் போல் நாமும் திகைத்து நிற்கிறோம், பல மறைமுகமான வழிகளில் சொல்லப் பார்க்கிறோம். இவற்றைப் புரிந்து கொள்ளும் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் இருந்தால் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால் நாம் பாதுகாப்பை அடையலாம்.

"என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்." என்ற இந்த வரியை நாம் சிந்திக்கும் இந்த வேளையில் வாழ்வைச் சிறிது சிறிதாக அழித்துக்கொண்டிருக்கும் நம் குடும்பத்தினரை, உறவினர்களை, நண்பர்களை இறைவனின் சன்னிதிக்குக் கொணர்வோம். நல்ல ஆயன் அவர்களைத் தன் அன்புக் கரங்களால் தொட்டு, அவர்களது சிந்தனைகளில் தன் அருள் தைலத்தைப் பூசி அவர்களைத் தீமைகளிலிருந்து காக்க வேண்டுமென சிறப்பாக வேண்டுவோம். தைலம் பூசுவதன் ஆழமான பொருளை நாம் தொடர்ந்து சிந்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.