2011-01-15 14:48:55

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
பொங்கல் பெருநாளைக் கொண்டாடினோம். இப்பெரும்விழா பல்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடப்பட்டாலும், இவ்விழாவின் முக்கிய காரணம் அறுவடை. சில நூறு விதைகளாக நாம் நிலத்தில் தெளித்தவைகளை பல்லாயிரம் மணிகளாக அறுவடை செய்வதைக் கொண்டாடும் நாள் பொங்கல் பெருநாள். தரையில் விழுந்த விதை தானாகவே வளரும். உண்மைதான். ஆனால், கரிசனையுடன், கவனிப்புடன் நல்ல நிலத்தில் ஊன்றப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்படும் விதைகள் பல நூறு மடங்கு பயன் தரும்.
இந்த அழகிய அறுவடைத் திருநாளையொட்டி வரும் இன்றைய ஞாயிறு நமக்கு வழங்கும் வாசகங்கள், நாம் எவ்வகை நிலங்களில் விதைக்கப்படுகிறோம், வளர்க்கப்படுகிறோம் என்பவைகளைச் சிந்திக்க நம்மை அழைக்கின்றன.

நம்மைப் பற்றிய நல்லெண்ணங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்; அடுத்தவரிடம் நாம் காணும் அற்புதங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றன இன்றைய வாசகங்கள்.

அண்மையில் இயேசு சபை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் ஒரு அற்புதமான செய்தியை அனுப்பியிருந்தார். என் நண்பர்கள் அனைவருக்கும் அதை நான் அனுப்பி வைத்தேன். Value What You Have - அதாவது, உன்னிடம் உள்ளதை மதித்து வாழ்வாயாக என்ற தலைப்புடன் என்னை வந்தடைந்த இச்செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Olavo Bilac என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், பத்திரிக்கையாளர். ஒரு நாள் அவரது நண்பர் அவரைத் தேடி வந்தார். தன்னுடைய சிறு பண்ணை வீட்டை தான் விற்க விரும்புவதாகக் கூறிய நண்பர், அதை விற்பதற்கு நல்லதொரு விளம்பரத்தை எழுதித் தரும்படி Bilacஇடம் கேட்டுக்கொண்டார். Bilac பின்வரும் விளம்பர வரிகளை எழுதினார்:
"ஓர் அழகிய பண்ணை வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கு பறவைகளின் கானம் அதிகாலை முதல் ஒலிக்கும். பண்ணையின் நடுவில் அழகிய, தெளிந்ததொரு நீரோடை செல்கிறது. காலை இளஞ்சூரியனின் ஒளியில் வீட்டின் முகப்பு தினமும் குளிக்கும். மாலையில் பண்ணையில் பரவும் நிழல் நிம்மதி தரும்." என்ற இவ்வரிகளை எழுதி நண்பரிடம் கொடுத்தார் Bilac.
ஒரு சில வாரங்கள் சென்று அவர் தன் நண்பரைச் சந்தித்தார். "என்ன? அந்த பண்ணை வீட்டை விற்றுவிட்டாயா?" என்று கேட்டார். அதற்கு நண்பர், "இல்லை நண்பா! நீ அந்தப் பண்ணை வீட்டைப்பற்றி எழுதிய விளம்பரத்தை வாசித்தபின், என் பண்ணை வீடு எவ்வளவு அழகானதென்று அறிந்து கொண்டேன். அதை நான் விற்கப் போவதில்லை." என்று புன்னகையுடன் பதில் சொன்னார்.

நம்மைப் பற்றி, நம்மிடம் உள்ளவைகளைப் பற்றி எவ்வளவு தூரம் நாம் அறிந்துள்ளோம்; நம்மை நாமே எவ்வளவு ஆழமாய் புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது நல் வாழ்வு, நமது நல வாழ்வு அமையும்.

நம்மிடம் உள்ளவைகளைத் தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லப்படும் மற்றொரு சிறுகதை இது. நமக்கெல்லாம் தெரிந்த கதை தான். ஊரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் அமர்ந்து தர்மம் கேட்டு வாழ்ந்தார் ஒருவர். அதே இடத்தில் உறங்குவார். இவ்வாறு பல ஆண்டுகள் ஒரே இடத்தில் தர்மம் கேட்டு வாழ்ந்தவர் இறந்தார். அவர் இறந்ததும், ஊர் மக்கள் ஒன்று கூடி, அவர் தர்மம் கேட்டு வந்த இடத்திலேயே அவரைப் புதைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் புதை குழியைத் தோண்டியபோது, அவர் அமர்ந்திருந்த அந்த இடத்தில் விலைமதிப்பற்ற ஒரு புதையல் கிடைத்ததாம். புதையலுக்கு மேல் அமர்ந்து கொண்டு தர்மம் கேட்டார் இவர் வாழ்நாள் முழுவதும்.

நம்மிடம் உள்ள உண்மையான கருவூலங்களை, நம் வாழ்வில் புதைந்திருக்கும் அரிய புதையல்களைச் சரியாகப் பார்க்காமல், தொடுவானங்களை, தூரத்துக் கானல்நீரை, விலகி ஓடும் நிழல்களை நாம் துரத்துவதால் வாழ்வின் பெரும் பகுதியை, நேரத்தை நாம் வீணாக்குகிறோம். பல நேரங்களில் இந்தப் பொய்யான, மாயைகளைப் பெறுவதற்கு நம்மிடம் உண்மையாய் இருப்பவைகளை விலை பேசுகிறோம். நம் குடும்பம், தொழில், நண்பர்கள் என்று நம்மைச் சூழ்ந்துள்ள நல்லவைகளை இழந்துவிட்டு, பின்னர் வருந்துகிறோம். பல நேரங்களில் நாம் இழந்தவைகளை மீண்டும் பெறுவது மிகவும் கடினம்.

நம்மை நாமே புரிந்து கொள்ளாமல், நாம் நாமாக இல்லாமல், அவரைப் போல், இவரைப் போல் என்று போலி முகமூடிகளை அணிந்து கொண்டு வாழாமல், நாம் நாமாகவே வாழ்வதற்கு நம்மைப் பற்றிய தெளிவு முதலில் நமக்கு வேண்டும். இந்தத் தெளிவு நம்மைப் பற்றிய உண்மையான மதிப்பை நமக்குள் உருவாக்கும். வேறு யாரும் நம்மை மதிப்பதற்கு முன், நமது பார்வையில் நாம் மதிப்புப் பெற வேண்டும். நமது பார்வையில், இறைவன் பார்வையில் நாம் மதிப்பு பெற்றவர்கள் என்பதை எசாயா இறைவாக்கினர் போல் நாமும் நெஞ்சுயர்த்திச் சொல்ல வேண்டும்.

இறைவாக்கினர் எசாயா 49 1-6
கருப்பையில் இருக்கும்போதே ஆண்டவர் என்னை அழைத்தார்: என் தாய் வயிற்றில் உருவாகும்போதே என் பெயர் சொல்லிக் கூப்பிட்டார். தம் கையின் நிழலால் என்னைப் பாதுகாத்தார்: அவர் என்னிடம், நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன் என்றார்... கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல். 
ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் மதிப்புப் பெறும்போதுதான், அடுத்தவரையும் நம்மால் மதிக்க முடியும். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் திருமுழுக்கு யோவான் இதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு. தன்னைச் சுற்றிலும் எப்போதும் அலைமோதும் கூட்டத்தை யோவான் தன்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், அப்படியே செய்திருக்க முடியும். தன்னைச் சுற்றி வாழ்க என்று கூறும் கூட்டத்தை வைத்து தன் மதிப்பை யோவான் உணரவில்லை. இறைவனின் வழியை ஏற்பாடு செய்வதில்தான் தன் மதிப்பு அடங்கியுள்ளது என்று தன்னைப் பற்றியத் தெளிவு யோவானுக்கு இருந்தது. எனவே, தான் ஏற்பாடு செய்திருந்த வழிக்குச் சொந்தக்காரர் வந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும், அவர் மக்களின் கவனத்தை இறைவன் பேரில் திருப்பினார். இதைத்தான் இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது.

யோவான் நற்செய்தி 1 29-34
இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், “இதோ! இறைவனின் செம்மறி, செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்…” என்றார். 
தன்னை விட வேறொருவர் அதிக மதிப்புடையவர் என்று சொல்வதற்கு வார்த்தையளவில் ஒலிக்கும் தாழ்ச்சி மட்டும் போதாது. தன்னம்பிக்கையும், தன்னைப் பற்றியத் தெளிவும் தேவை. இத்தகையத் தெளிவும், நம்பிக்கையும் இல்லாமல் பிறரை உயர்த்திப் பேசும்போது, அதில் ஓர் ஏக்கம், ஒரு போலியான தாழ்ச்சி தெரியும். தன்னைப் பற்றிய உயர்வான எண்ணங்களும், தன்னைப் பற்றிய சரியான மதிப்பும் கொண்டிருந்தால் மட்டுமே அடுத்தவரை உயர்வாக எண்ண முடியும், மதிக்க முடியும்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைச் சுட்டிக்காட்டி, புகழுரைகள் சொன்னார். இயேசுவும் திருமுழுக்கு யோவானைக் குறித்து மிகச் சிறந்த புகழுரை வழங்கியதை சில வாரங்களுக்கு முன் - திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறன்று நற்செய்தியின் வழியாகக் கேட்டோம். மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. (மத்தேயு நற்செய்தி 11: 11) என்று இயேசு கூறினார்.
இயேசுவும் யோவானும் ஒருவரையொருவர் புகழ்ந்து கொண்டது வெறும் முகத்துதி அல்ல. இருவரும் தங்களை உள்ளூர உயர்வாக மதித்தவர்கள், எனவே அவர்களால் அடுத்தவரின் உயர்வையும் மனதார உணர முடிந்தது. வாயாரப் புகழ முடிந்தது.

மலையுச்சியில் இருந்தது ஒரு துறவியர் மடம். பல ஆண்டுகளுக்கு முன் அம்மடத்தில் இளையோர், முதியவர்கள் என்று பல நூறு துறவிகள் மகிழ்வோடு வாழ்ந்தனர். செபங்களும், பாடல்களும் நாள் முழுவதும் எழுந்தவண்ணம் இருந்தன. மக்களும் அம்மடத்தைத் தேடி வந்தனர். இப்போதோ, அம்மடத்தில் வயதானவர்கள் ஒரு சிலரே இருந்தனர். பாடல்கள் ஒலிப்பதில்லை. மக்களும் வருவதில்லை. மடம் இப்படி மாறியதற்கு மடத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி வாழ்ந்து வந்தனர்.
மடத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது எப்படி என்று அறிய அம்மடத்தின் தலைவர் மற்றொரு மடத்தில் இருந்த துறவியின் ஆலோசனையைக் கேட்டார். அவர் அந்த மடத்தலைவரிடம் ஒரே ஒரு மந்திரத்தைச் சொல்லி அவரை அனுப்பி வைத்தார். அந்த மடத்தலைவர் மீண்டும் தன் மடத்திற்குத் திரும்பி வந்து, தன் துறவிகள் அனைவரையும் அழைத்து, மற்றொரு மடத்தின் துறவி சொன்னதைச் சொன்னார்: "நம் மத்தியில் ஒருவர் மெசியாவாக இருக்கிறார்." என்பதே அந்த மந்திரம். இதைக் கேட்ட துறவிகள் சிந்திக்க ஆரம்பித்தனர். நம்மிடையே இருக்கும் மெசியா யாராக இருக்க முடியும்?... எப்போதுமே சந்தேகப்படும் சகோதரர் தாமஸா? ஒரு வேலையும் செய்யாமல் சுற்றிக் கொண்டிருக்கும் சகோதரர் சாமுவேலா? எப்போதும் கோபப்படும் தந்தை பவுலா? யார் அந்த மெசியா? என்று ஒவ்வொருவரும் சிந்திக்க ஆரம்பித்தனர்.
விரைவில் மெசியா இவரோ, அவரோ என்ற புதிரில், ஒருவரை ஒருவர் மதித்து நடத்த ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பினால், அங்கு அன்பு, பரிவு அடக்கம் என்ற அழகிய பண்புகள் அனைத்தும் வளரத் தொடங்கின. விரைவில் அந்தத் துறவிகளின் வாழ்வைக் கண்டு பல இளையோர் அவர்களுடன் சேர்ந்தனர். மக்களும் அந்த மடத்தைத் தேடி வந்தனர். அவர்களில் யார் மெசியா என்ற புதிர் தீர்க்கப்படவில்லை. ஆனால், அனைவரும் மெசியாவுக்குரிய மதிப்பைப் பெற்றனர்.
நாம் வாழும் சூழல்களில் மெசியாக்கள் இருக்கலாம். நாம் ஒவ்வொருவரும் நமக்குரிய மதிப்பை முதலில் நமக்கு நாமே வளர்த்துக் கொண்டு, பிறருக்கும் அவரவருக்குரிய மதிப்பை நாம் வழங்க ஆரம்பித்தால், உலகம் மதிப்பு பெறும், மீட்பு பெறும். கரிசனையுடன், கவனிப்புடன் நல்ல நிலத்தில் ஊன்றப்பட்டு, நீர் ஊற்றப்பட்டு வளர்க்கப்படும் விதைகள் பல நூறு மடங்கு பயன் தருவதைப்போல் மதிப்பை விதைப்போம். மாண்பை அறுவடை செய்வோம்.







All the contents on this site are copyrighted ©.