2011-01-15 14:48:13

சனவரி 16, வாழந்தவர் வழியில்...


இலங்கையின் திருத்தூதர் என்றழைக்கப்படும் ஒரு கத்தோலிக்க குரு இன்றைய நமது வாழ்ந்தவர் வழியில் பகுதியின் நாயகன்.
1651ம் ஆண்டு இந்தியாவின் கோவாவில் பிறந்தவர் ஜோசப் வாஸ் (Joseph Vaz). இயேசுசபை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, பின்னர் 1676ம் ஆண்டு குருவாகத் திருநிலைப் படுத்தப்பட்டார். 1677ம் ஆண்டு சிறப்பான ஒரு வாக்குறுதியின் வழியாக "மரியாவின் அடிமை" என்று தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
தன் குருத்துவப் பணியால் பேரும் புகழும் அடைந்து வந்தார் அருள்தந்தை வாஸ். இதைக் கண்டு பொறாமையுற்ற சிலர், அவரைக் கொல்லத் தீர்மானித்து, ஒரு மலையுச்சிக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரை இக்குழுவினர் தாக்க முற்பட்டபோது, அருள்தந்தை வாஸ் முழந்தாள்படியிட்டு செபிக்க ஆரம்பித்தார். அவர் அப்படி செபிக்க ஆரம்பித்ததும், அவ்விடத்தில் ஒரு நீரூற்று தோன்றியது. இதைக் கண்ட அக்குழுவினர் பயந்து ஓடிவிட்டனர். இது பாரம்பரியமாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி.இலங்கையில் பணிசெய்வதற்கு குருக்கள் இல்லை என்பதைக் கேள்விப்பட்ட அருள்தந்தை வாஸ், 1687ம் ஆண்டு இலங்கை சென்றடைந்தார். 23 ஆண்டுகள் அயராமல் உழைத்த அருள்தந்தை, தனது 59ம் வயதில் இறையடி சேர்ந்தார். 1995ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இவரை முத்திபேறு பெற்றவராக உயர்த்தினார். இலங்கையின் திருத்தூதர் என்று புகழப்படும் முத்திபேறு பெற்ற ஜோசப் வாஸ் 1711ம் ஆண்டு சனவரி 16ம் நாள் இறையடி சேர்ந்தார். அவர் மறைந்த மூன்றாம் நூற்றாண்டு இது.







All the contents on this site are copyrighted ©.