2011-01-14 15:26:09

திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலுக்கு முத்திப் பேறு பட்டம் மே 01,2011


சன.14,2011. திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் வருகிற மே ஒன்றாம் தேதி வத்திக்கானில் முத்திப் பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்படவுள்ளார் என்று திருப்பீடம் இவ்வெள்ளியன்று அறிவித்தது.

இறையடியார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை குறித்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் இவ்வெள்ளியன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கையெழுத்திட்ட பின்னர் இந்த அறிவிப்பை வெளியிட்டார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.

இறைஇரக்கத்தின் ஞாயிறான மே 1ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இவ்விழாத் திருப்பலியை நிகழ்த்தி இரண்டாம் ஜான் பால் அவர்களை முத்திப் பேறு பெற்றவர் என அறிவிப்பார் எனவும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.

2001ம் ஆண்டில் பாஸ்கா கால இரண்டாம் ஞாயிறை இறைஇரக்கத்தின் ஞாயிறாக அறிவித்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி இந்த இறைஇரக்கத்தின் ஞாயிறு திருவிழிப்பு அன்று இறைபதம் அடைந்தார். இவரது பரிந்துரையால் ப்ரெஞ்ச் நாட்டு அருட்சகோதரி ஒருவர் பார்க்கின்சன் நோயிலிருந்து அற்புதமாகக் குணமாகியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டு Wadowice ல் 1920ம் ஆண்டு மே 18ம் தேதி பிறந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், சுமார் 27 ஆண்டுகள் பாப்பிறையாகப் பணியாற்றியவர்.

மேலும், இரண்டு இறையடியார்கள் Antonia Maria Verna, Antonia Maria Verna இவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகள்,

போஸ்னியா எர்செகொவினாவில் 1941ம் ஆண்டு டிசம்பர் 15க்கும் 23க்கும் இடைப்பட்ட நாட்களில் கொல்லப்பட்ட இறையன்புப் புதல்விகள் சபையின் Maria Giulia , Maria Bernadetta, Maria Krizina, Maria Antonia, Maria Berchmana ஆகிய ஐந்து அருட்சகோதரிகளின் மறைசாட்சியம்,

இன்னும், Antonio Franco, Francesco Maria della Croce ,Nelson Baker, Faustino Pérez-Manglano Magro, Francesca de Paula de Jesús, ஆகிய ஐந்து இறையடியார்களின் வீரத்துவமான வாழ்வு ஆகியவை குறித்த ஆவணங்களையும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அதிகாரப்பூர்வமாக இவ்வெள்ளியன்று அங்கீகரித்தார்.







All the contents on this site are copyrighted ©.