2011-01-14 15:22:58

அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது பொங்கல் பெருநாள் வாழ்த்துக்கள்.

வாழ்ந்தவர் வழியில்...........


சனவரி 15 ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் நிற வெறி என்பது காட்டுமிராண்டித்தனமாக தலைவிரித்தாடியது. கறுப்பின மக்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டார்கள். பெரும்பான்மையான வெள்ளை மாணவர்கள் கல்வி கற்ற கல்லூரியில் முதன் முதலாக கறுப்பின மாணவி படிக்க போன போது மிகக் கேவலமாகவும், மட்டமாகவும் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் இன்று நிற வேற்றுமை என்பது அமெரிக்காவில் இளைய சமுதாயத்தினரிடையே அடிபட்டுப் போய் கலப்பின சமுதாயமாக மாறி, அன்று மெம்பிஸின் மலைச்சிகரங்களின் மீது நின்று தனது மனதின் கனவுகளை வெளியிட்ட மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளை நனவாக்கி அமெரிக்காவின் முதற் குடிமகனாக வெள்ளையரல்லாத ஒரு மனிதரை கௌரவித்துள்ளது அமெரிக்காவின் இன்றைய சமூகம். ஒருவகையில் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அவர்களுக்கு இது அமெரிக்க மக்களின் சமர்ப்பணமாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.

1929ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் பிறந்த மார்டின் லூதர் கிங் ஜூனியர், இனவேற்றுமைக்கு எதிராகவும், இனரீதியிலான பொருளாதாரக் கொள்கைக்கு எதிராகவும் போராட்டம் தொடங்கியதில் மேலிடங்களின் வெறுப்புக்கும், காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகினார்.

ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆப்ரிக்க-அமெரிக்கத் தலைவரான இவர், 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அமெரிக்கக் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய இந்த அகிம்சாவாதியின் முடிவும் மகாத்மா காந்தியை ஒத்ததாக இருந்தது. அமெரிக்காவின் மகாத்மா மார்டின் லூதர் கிங் ஜூனியர் மறைந்த போது அவரது வயது வெறும் 39 தான்.

வாழும்போதே 1964 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட இவருக்கு, இறந்த பின் 1977ல் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருதும் 2004ல் காங்கிரஸின் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.