2011-01-13 11:33:55

சனவரி 14 - வாழ்ந்தவர் வழியில்


எப்போதெல்லாம் நல்ல இசை கேட்கிறோமோ அந்த நிமிடங்களில் மனம் நனைந்து கரைந்து உருகும் அதிசய அனுபவத்தைப் பெறுகிறோம். இதைவிட வாழ்வின் இனிமையான தருணங்கள் என்னவாக இருந்துவிட முடியும்… மொழிகளுக்கும் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே. எதிரியே பாடினாலும் நின்று கேட்க வைக்கும் அபார சக்தி இசைக்கு மட்டுமே சொந்தம். ஒரு நாட்டின் பண்பாட்டு வளத்தையும், கலைப்பிரிவின் இசைத்திறத்தையும் வெளிப்படுத்தும் எந்த நாட்டு மொழியிலும் இந்த இசைக்கு ஒரு தனித்துவம் உள்ளதால், எங்கும் எந்தத் தாய்மொழியிலும் கொடுக்கப்படும் இசை புகழ்பெற்றதே. மக்கள் வாழ்க்கைக்கு இசை இனியதோர் மருந்தாகும். இன்பத்தில் மட்டும் இல்லாமல் துன்பத்தைத் தூக்கி எறியவும் இசை துணையாக உள்ளது. இசைக்கு எங்கும் எதிலும் ஒரு மகத்துவம் உண்டு. இசையை ரசித்தால் மட்டும் போததாது. அதோடு நாம் கலந்து விட்டால்தான் இசையை இன்பமாக ரசிக்க முடியும்.

1690ம் ஆண்டு சனவரி 14ம் தேதி கிளாரினெட் (clarinet) இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கர்நாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இது ஏறக்குறைய நாதசுவரத்தின் வடிவத்தை ஒத்தது. Reed என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ற வகையில் பொருத்தப்பட்டிருக்கும். இதன் குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும். 19ம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் சின்னமேளம் என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார். ஏ.கே.சி. நடராஜன் ஒரு சிறந்த கிளாரினெட் இசைக் கலைஞர்.








All the contents on this site are copyrighted ©.