2011-01-12 14:10:53

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


சன 12, 2010. கடந்த சில வாரங்களாக உரோம் நகரில் வீசிக்கொண்டிருந்த குளிர்காற்றைப் பார்த்தவர்கள், இந்த ஆண்டு குளிர் அதிகமாகவே இருக்கப்போகிறது என்றே பயந்து வந்தனர். இதற்கேற்றார்போல் உலகம் முழுவதும் இவ்வாண்டு குளிரின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக உரோம் நகரில் வெப்பத்தின் அளவைப் பார்த்தவர்களுக்கு இது குளிர் காலம் தானா என்ற சந்தேகமே வந்து விட்டது. டிசம்பர், சனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் உரோம் நகருக்குக் குளிர் நிறைந்த மாதங்கள் என்ற உண்மை நிலையைத் தகர்ப்பதாக இந்த இரண்டு மூன்று நாட்களின் தட்பவெப்ப நிலை உள்ளது. குளிரின்றி காணப்படும் இந்த நாட்களில் உரோம் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரித்திருக்க, இப்புதன் காலை, வத்திக்கான் நாட்டில் அமைந்திருக்கும் திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உத்தரிக்கும் தலம் குறித்து காட்சி கண்ட 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெனோவாவின் புனித காத்ரீன் குறித்து இன்றைய நம் மறைபோதகத்தில் நோக்குவோம் என தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட். இளம் வயதிலேயே திருமணம் புரிந்த புனித காத்ரீன், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மனமாற்றத்தின் வல்லமை மிகு அனுபவம் ஒன்றைப் பெற்றார். இப்புனிதரின் சொந்த பாவங்களையும் இறைவனின் அளவு கடந்த அன்பையும் வெளிப்படுத்தியவராக இயேசு கிறிஸ்து சிலுவையைச் சுமந்த நிலையில் இவருக்கு காட்சியளித்தார். மிகவும் தாழ்ச்சியுடைய பெண்ணான இவர், தொடர் செபத்தையும் மோனநிலை ஒன்றிப்பையும் உதவித் தேவைப்படுபவர்களுக்கான பிறரன்புப் பணிகளோடு இணைத்தார். அனைத்திற்கும் மேலாக இந்த ஒன்றிப்பு நிலை பணியானது இவர் ஜெனோவாவின் மிகப்பெரும் மருத்துவ மனையின் இயக்குனராக பணியாற்றியபோது வெளிப்படுத்தப்பட்டது. உத்தரிக்கும் தலம் குறித்த இப்புனிதரின் எழுத்துக்கள் குறிப்பிடும்படியான எதையும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் அதேவேளை, இறைவனுடன் ஆன முழு ஒன்றிப்பிற்கான தயாரிப்பாக நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் உள் நெருப்பாக உத்தரிக்கும் தலத்தை அவர் புரிந்துகொண்டதை வெளிப்படுத்தி நிற்கின்றன. இறைவனின் முடிவற்ற அன்பு மற்றும் நீதி குறித்து உணர்ந்துள்ள ஆன்மாவானது, பாவத்தின் கறைகளிலிருந்து இறை அன்பு தன்னை தூய்மைப்படுத்தும்போது கூட, தன்னால் அவ்வன்பிற்கு சரியான பதில்மொழி வழங்க முடியவில்லையே என வேதனை கொள்கிறது. இறை அன்பின் தூய்மையாக்கும் இந்த சக்தி குறித்து விவரிக்கும்போது புனித காத்ரீன், இறைவிருப்பத்திற்கு ஆன்மா தன்னை முழுமையாக கையளிக்க அழைக்கும் ஒரு தங்க விலங்கு என்ற உருவகத்தைப் பயன்படுத்துகின்றார். இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்ற விசுவாசிகளுக்கான நம் செபத்தின் முக்கியத்துவம் குறித்து தன் வாழ்வு மற்றும் படிப்பினைகள் மூலம் நமக்கு நினைவுறுத்தும் ஜெனோவாவின் புனித காத்ரீன், செபத்திற்கும் பிறரன்பு நடவடிக்கைகளுக்கும் நாம் நம்மை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்.

இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.