2011-01-12 14:09:36

ஜனவரி 13.. – வாழ்ந்தவர் வழியில்........,


தியோஃபிலஸ் கைரிஸ் என்பவரைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் ஒரு தத்துவ ஞானி, புரட்சியாளர் மற்றும் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குரு. இன்றைய நவீன பல்கலைக்கழக முறையின் தந்தை எனவும் இவர் அறியப்படுகிறார். ஒரு குருவாக இருந்துகொண்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற இவரின் ஆர்வம் கொளுந்து விட்டு எரிந்தது. தத்துவ ஞானிகளுக்கு பெயர் போன கிரேக்கத்தில் 1783ம் ஆண்டு பிறந்த இவர், மக்களுக்கு முதலில் கல்வி அறிவு தேவை என்பதை உணர்ந்து ஒரு சிறந்த கல்விக்கூடத்தைத் துவக்கினார். பின்னர் தன் பேச்சின் மூலம் மக்களில் சுதந்திரத் தாகத்தை ஏற்படுத்தினார். கிரேக்கப் புரட்சியின் முக்கிய சிந்தனையாளர்களுள் ஒருவரான தியோஃபிலஸ் கைரிஸ், ஓட்டமான் பேரரசுக்கு எதிராக விடுதலைப்போரை 1821 ம் ஆண்டு அறிவித்தார். குருவாக இருந்துகொண்டே விடுதலைப்போரில் பங்குபெற்று பெருமளவில் காயமுற்றார். கிரேக்க அரசியலமைப்பை வடிவமைக்க இவர் அழைக்கப்பட்டார். மக்களிடையே விடுதலை எண்ணங்களை பரப்பி வந்த இவரை திசைத் திருப்ப விரும்பிய ஓட்டோ மன்னர், இவருக்கு ஏதன்ஸ் பல்கலைகழகத்தின் இயக்குனர் என்ற உயரிய பதவியையும், தங்கச்சிலுவை என்ற விருதையும், மதிப்பையும் வழங்க முன்வந்தார். ஆனால் அவைகளை வாங்க மறுத்த குரு தியோஃபிலஸ் கைரிஸ், மக்கள் பணியே தன் பணி என்றார். சில நாட்களிலேயே மன்னர் மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் கோபத்திற்கு உள்ளான இவர், 1839ம் ஆண்டு அக்கிறிஸ்தவ சபையின் ஆயர் மன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு அரசியல் கைதியாக இஸ்கியாதோஸ் தீவின் ஒரு துறவு மடத்திற்கு நாடுகடத்தப்பட்டார். இவர் மீதான குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட்டு, மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கும் பத்து நாட்களுக்கு முன்னர் 1853ம் ஆண்டு சனவரி மாதம் 13ம் நாள் காலமானார் கிரேக்க தத்துவ ஞானியும், புரட்சியாளரும், குருவுமான தியோஃபிலஸ் கைரிஸ்.








All the contents on this site are copyrighted ©.