2011-01-12 15:58:42

எகிப்துடன் அரசியல் உறவுகள் பாதிக்கப்படாமல் இருப்பதில் வத்திக்கான் கவனமாக உள்ளது - திருப்பீடத்தின் பேச்சாளர்


சன.12, 2010. திருப்பீடத்திற்கான எகிப்து நாட்டு தூதரை அந்நாட்டு அரசு இச்செவ்வாயன்று தங்கள் நாட்டுக்குத் தற்காலிகமாகத் திரும்பும்படி பணித்தது.
எகிப்து அரசின் இந்தச் செயலால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே உள்ள அரசியல் உறவுகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதில் வத்திக்கான் கவனமாக உள்ளதென்று திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி செய்தியாளர்களிடம் இச்செவ்வாயன்று கூறினார்.
வத்திக்கானில் இத்திங்களன்று அனைத்து நாடுகளின் தூதர்களைத் திருத்தந்தைச் சந்தித்து உரையாற்றுகையில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை நிறுத்த பன்னாட்டுத் தூதர்களும் தங்கள் அரசுகளுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திருத்தந்தையின் இந்த உரை தங்கள் உள்நாட்டு விவகாரங்கள் குறித்த ஒரு தலையீடு என்று கருத்து தெரிவித்த எகிப்து அரசு, தங்கள் தூதரைத் தற்காலிகமாக அழைத்துக் கொண்டது.
எகிப்தின் தூதர் வத்திக்கானை விட்டு பயணமாவதற்கு முன், திருப்பீடத்தின் அயல்நாட்டு விவகாரங்களின் செயலர் பேராயர் Dominique Mambertiஐச் சந்தித்துவிட்டுச் சென்றார்.எகிப்தில் நடந்த வன்முறைகள் திருத்தந்தையையும், திருப்பீடத்தையும் மிகவும் வருத்தமுறச் செய்துள்ளனவெனினும், இந்தச் சூழ்நிலையில் எகிப்து அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகளைத் திருத்தந்தை பாராட்டியுள்ளார் என்று பேராயர் Mamberti எகிப்தின் தூதரிடம் கூறினார் என்று அருள்தந்தை லொம்பார்தி தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.