2011-01-11 15:38:48

விவிலியத் தேடல்


RealAudioMP3
"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்" திருப்பாடல் 23ன் இந்த ஐந்தாம் திருவசனத்தில் நம் தேடலை சென்ற வாரம் ஆரம்பித்தோம். 23ம் திருப்பாடலின் விளக்கங்களை எழுதியிருக்கும் பல விவிலிய அறிஞர்கள் இந்த வரி சிறிது புதிராக இருப்பதாக கூறியுள்ளனர். இந்தப் புதிரைத் தீர்ப்பதற்கும் அவர்கள் முயற்சிகள் செய்துள்ளனர். அவர்களது விளக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கு முன், 'எதிரிகள்' என்ற சொல்லை நாம் புரிந்து கொள்வது நமக்கு நல்லது. முயல்வோமே!

'எதிரி' என்ற சொல்லைக் கேட்டதும் நம்மைத் தாக்க வருபவர், நமக்குத் தீங்கு விளைவிப்பவர் என்ற எண்ணங்கள் பொதுவாக மனதில் எழும். 'எதிரி' என்ற சொல்லில் போட்டி, பொறாமை என்ற எண்ணங்களும் பொதிந்திருக்கும். மனிதப் பிறவிகளாகிய நாம் பிறக்கும்போது எதிரிகளாகப் பிறப்பதில்லை. எதிரிகள் உருவாகின்றனர், அல்லது உருவாக்கப்படுகின்றனர்.
கடந்த ஞாயிறு சிந்தனையின் போது, மிருகக்குட்டிகள், பறவைக்குஞ்சுகள் வளர்வதற்கும் மனிதக்குழந்தைகள் வளர்வதற்கும் உள்ள காலவேறுபாடு குறித்து சிந்தித்தோம். நமக்கும், பிற உயிரினங்களுக்கும் உள்ள மற்றுமொரு முக்கிய வேறுபாடு போட்டிகள்... வேறு எந்த உயிரினத்திலும் போட்டிகள் இல்லை. மிருகங்கள் ஒன்றை ஒன்று கடித்துக் குதறி உண்ணும்போதும், அவைகள் எதிரிகளாய் இருப்பதால் ஒன்றையொன்று கொன்று சாப்பிடுகின்றன என்று நாம் சொல்வதில்லை. ஒவ்வொரு மிருகமும் தன் உடல் தேவைகளைத் தீர்த்துக் கொள்ளவோ, அல்லது தன்னைக் காத்துக் கொள்ளவோ மட்டுமே தாக்குதல்களை மேற்கொள்கின்றன. தங்களில் யார் பெரியவர் என்பதை நிலை நாட்டும் போட்டிகள் அல்ல இவை. ஒரு மிருகம் வேறொரு மிருகத்தைக் கொன்றுவிட்டு, பழி தீர்த்ததாக, போட்டியில் வென்றதாக மார்தட்டி நிற்பதில்லை. ஆனால், இந்த மிருகங்களை மனிதப்பிறவிகளாகிய நாம் போட்டிகளுக்குப் பழக்கப்படுத்துகின்றோம். மனிதப் பிறவிகளுக்கே உரிய போட்டி, பொறாமை ஆகியவற்றை மிருகங்கள் மீதும் புகுத்தும் மனிதப் பிறவிகளை என்னென்று சொல்வது?

மனித மனங்களில் உருவாகும் போட்டி, பொறாமை இவைகளே எதிரிகளை உருவாக்குகின்றன. ஆழமாகச் சிந்தித்தால், வெளி உலகில் எதிரிகள் பிறப்பதில்லை; அவர்கள் முதலில் நம் உள் உலகில், அதாவது, மனங்களில் பிறக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எதிரிகளைப் பற்றி பல ஆயிரம் கூற்றுகள் உண்டு. அவைகளில் அண்மையில் என் மனதைக் கவர்ந்த ஒரு கூற்று இது:
"நமக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்தாலும், அவர்களில் ஒருவரையும் நம் தேவைக்கு அதிகமாய் இருக்கிறார் என்று நாம் உணர மாட்டோம். அதே வேளையில், நமக்கு ஒரே ஓர் எதிரி இருந்தால் போதும். அந்த எதிரியை எல்லா இடங்களிலும் நாம் சந்திப்போம்."
He who has a thousand friends has not a friend to spare, while he who has one enemy will meet him everywhere. Variant translation: Believe me, a thousand friends suffice thee not; In a single enemy thou hast more than enough.
Ali bin Abu -Talib
இதைச் சொன்னவர் முகமது நபியின் உறவினரான Ali bin Abu–Talib. எதிரிகள் வெளி உலகில் பிறப்பதில்லை, நமக்குள் பிறக்கின்றனர் என்பதைக் கண்டுணர திருப்பாடல் 23ன் ஐந்தாம் திருவசனம் நமக்கு நல்லதொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

"என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்"
என்ற இந்த வரிக்கு விவிலிய அறிஞர்கள் சிலர் கூறும் விளக்கங்களில் ஒரு சில இதோ:
எதிரிகளை நாணச் செய்யும் வகையில் அல்லது பொறாமையில் அவர்கள் புழுங்கும் வகையில் இந்த விருந்தினை இறைவன் ஏற்பாடு செய்துள்ளார்... என்பது ஒரு விளக்கம் (Bratcher)
எதிரிகளைக் குறிவைத்து, அல்லது அவர்களை மனதில் வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து இதுவல்ல. இறைவன் ஏற்பாடு செய்துள்ள விருந்து என்பதால், ஊரில் உள்ள அனைவரின் கவனத்தையும் கவர்ந்திருக்கும். அவர்களில் திருப்பாடல் ஆசிரியரின் எதிரிகளும் இருந்தனர் என்பது மற்றொரு விளக்கம். (Anderson)
திருப்பாடல் ஆசிரியரின் வாழ்வைப் பாதித்த பல எதிரிகளை அவர் நினைத்துப் பார்க்கிறார். இப்பாடலை எழுதும் நேரத்தில் அவர் அனுபவித்து வந்த பாதுகாப்பு, வழி நடத்துதல், பல்வேறு கொடைகள் ஆகியவற்றை இறைவன் ஒரு விருந்தாக தனக்கு வழங்குவதைத் தன் எதிரிகள் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் ஆசிரியர் இந்த வரிகளை எழுதியிருக்கலாம் என்பது வேறொரு விளக்கம். (Perowne)

இவ்விதம் பல அறிஞர்கள் பல விளக்கங்களைத் தந்துள்ளனர். என் சிந்தனைகளை, என் மனதைக் கவர்ந்த ஒரு விளக்கத்தை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எதிரிகளைச் சந்திக்கும் சூழ்நிலையில் உணவைப் பற்றிய எண்ணமே எழாது. உணவின் எண்ணமே இல்லாத போது, விருந்து என்ற சொல்லுக்கே இடமில்லை. ஆனாலும், எதிரிகள் சூழ்ந்த நேரங்களில் விருந்துகள் நடக்க வாய்ப்பு உண்டு. மிக அரிதான, மிக அற்புதமான வாய்ப்பு இது.
போர்க்களம் ஒன்றை கற்பனை செய்து கொள்வோம். எதிரிகளின் தாக்குதல் இருக்கும் வேளைகளில் உணவு, உறக்கம் போன்ற அடிப்படை மனிதத் தேவைகளைப் பற்றி படைவீரர்கள் நினைத்துப் பார்ப்பதே இல்லை.
ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தால், போர்க்களத்தில் பல நாட்கள், தங்க வேண்டியிருந்தால், அடிப்படை மனிதத் தேவைகள் போர்க்களத்திலும் தலைதூக்கும். உணவின் தேவை உணரப்படும்; அந்தத் தேவை அவசரம், அவசரமாகத் தீர்க்கப்படும். உறக்கத்தின் தேவையை நிறைவு செய்ய வீரர்கள் சிறு, சிறு குழுக்களாகப் பிரிந்து, மாறி, மாறி உறங்க வேண்டியிருக்கும்.
போர்க்களமே ஒருவரது வாழ்க்கையாக மாறி விட்டால், உணவு, உறக்கம் ஆகிய தேவைகள் இன்னும் ஒழுங்கு படுத்தப்படும். போரே வாழ்வாகிப்போன வீரர்கள் மத்தியில் அவ்வப்போது விருந்துகளும் நடைபெறும் வாய்ப்பு உண்டு. ஓர் அழகிய வரலாற்று நிகழ்வு என் நினைவுக்கு வருகிறது. உங்களுக்கும் இது தெரிந்திருக்கும்.

1914ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் முதல் உலகப் போர் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய போர் ஆரம்பமானது. அந்தப் போர் விரைவில் முடிந்து, வீரர்கள் எல்லாரும் கிறிஸ்மஸுக்கு வீடு திரும்புவர் என்றுதான் ஆரம்பத்தில் அனைவரும் நினைத்தனர். ஆனால், உண்மை நிலை விரைவில் புரிய ஆரம்பித்தது. டிசம்பரிலும் போர் தொடர்ந்தது. போரை முற்றிலுமாக நிறுத்த, அல்லது குறைந்த பட்சம் தற்காலிகமாவது நிறுத்துவதற்கான முயற்சிகள் ஆரம்பமாயின. 101 பிரித்தானிய இல்லத் தலைவிகள் சேர்ந்து ஜெர்மனி, ஆஸ்திரியா நாடுகளில் இருந்த இல்லத்தலைவிகளுக்கு அனுப்பிய ஒரு மடல் இம்முயற்சிகளை ஆரம்பித்து வைத்தன. முதல் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் திருத்தந்தையாய் இருந்த 15ம் பெனெடிக்ட், போரில் ஈடுபட்டிருந்த அத்தனை நாட்டுத் தலைவர்களுக்கும் டிசம்பர் 7ம் நாள் விண்ணப்பம் ஒன்றை அனுப்பினார். "விண்ணகத் தூதர்களின் பாடல்களைக் கிறிஸ்மஸ் நேரத்தில் கேட்பதற்காகவெனினும், அந்த இரவில் துப்பாக்கிச் சப்தங்களை நிறுத்துங்கள்." என்று திருத்தந்தை விண்ணப்பித்திருந்தார்.

இம்முயற்சிகள் ஓரளவு பயன் தந்தன. அதிகாரப் பூர்வமற்ற போர் நிறுத்தம் டிசம்பர் 24 காலையிலிருந்து கடைபிடிக்கப்பட்டது. அன்றிரவு வழக்கத்திற்கும் அதிகமாகக் குளிர் வாட்டி எடுத்தது. பிரித்தானிய படைவீரர்கள் தாங்கள் தங்கியிருந்த பதுங்குக் குழிகளில் மெழுகுதிரிகளை ஏற்றி வைத்தனர். போர்க்களங்களில் இருளில் விளக்கேற்றுவது முட்டாள்தனம். விளக்குகள் எதிரிகளின் கவனத்தை ஈர்க்கும்; பதுங்கு குழிகள் தாக்கப்படும் என்ற போர்க்கள விதிகளை எல்லாம் அறிந்திருந்தாலும், பிரித்தானிய வீரர்கள் கிறிஸ்மஸ் இரவுக்காக விளக்குகளை ஏற்றி, Silent Night என்ற பாரம்பரிய கிறிஸ்மஸ் பாடலைப் பாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் அருகிலிருந்த பதுங்குக் குழியிலிருந்து ஜெர்மானிய வீர்கள் அதே பாடலை ஜெர்மன் மொழியில் பாட ஆரம்பித்தனர்.
ஜெர்மானிய, பிரித்தானிய படை வீரர்கள் எரியும் மெழுகு திரிகளைக் கையிலேந்தி, பதுங்கு குழிகளைவிட்டு வெளியேறினர். பதுங்குக் குழிகளைவிட்டு வெளியேறும் எந்த வீரனும் கையில் துப்பாக்கி ஏந்தியபடியே வெளியேறவேண்டும். தோல்வி அடைந்து சரண் அடையும்போது மட்டுமே துப்பாக்கி ஏதுமின்றி நிராயுதபாணியாய் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி வெளியேற வேண்டும். ஆனால், அன்று டிசம்பர் 24ம் தேதி இரவு அந்தப் போர்க்களத்தில் எல்லா போர் விதிகளும் மாற்றியமைக்கப்பட்டன. ஆயுதங்களுக்குப் பதிலாக எரியும் மெழுகு திரிகளைத் தாங்கி வெளியே வந்தனர் இரு நாட்டு வீர்களும். தங்களிடம் இருந்த பிஸ்கட், ரொட்டி, சாக்லேட், பழங்கள் ஆகியவைகளைப் பகிர்ந்து உண்டனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். "நான் என் வாழ்வில் அனுபவித்த மிகச் சிறந்த கிறிஸ்மஸ் விருந்து இதுதான்." என்று அவ்வீரர்களில் பலர் தங்கள் குடும்பத்தினருக்குக் கடிதங்கள் அனுப்பினர்.
போர்களத்திலும், எதிரிகள் சூழ்ந்திருக்கும் போதும், விருந்து நடக்கும், நடந்துள்ளது என்பதற்கு இது ஓர் அழகிய வரலாற்றுச் சான்று. டிசம்பர் 23 வரை எதிரிகளாய் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொன்ற வீரர்கள் 24 இரவில் ஒன்று சேர்ந்து கிறிஸ்மஸ் விருந்தைச் சுவைத்தனர். அவ்வீரர்களில் ஏறத்தாழ அனைவருமே கிறிஸ்துவர்கள். அவர்களில் ஒரு சிலராவது போர் முடிந்து வீடு திரும்பிய பின், திருப்பாடல் 23ஐ வாசித்திருக்கலாம், அல்லது வாசிக்கக் கேட்டிருக்கலாம். அந்நேரங்களில் 1914ம் ஆண்டு டிசம்பர் 24 இரவு நடந்த விருந்தை, எதிரிகளின் கண் முன்னே இறைவன் நடத்திய அந்தப் புதுமை விருந்தை கட்டாயம் அவர்கள் மனங்கள் அசைபோட்டிருக்கும்.

எதிரிகள் கண் முன்னே விருந்து ஏற்பாடு செய்யும்போது, இது போன்ற புதுமைகள் நடப்பதை விரும்பி, புதுமைகள் நடக்கவேண்டும் என்று எதிர்பார்த்தே இறைவன் விருந்தினை ஏற்பாடு செய்வார். எதிரிகள் இன்னும் ஆத்திரம் அடைய வேண்டும், வெட்கித் தலைகுனிய வேண்டும் என்பதற்காக இறைவன் விருந்தை ஏற்பாடு செய்ய மாட்டார். மாறாக, அவர் ஏற்பாடு செய்யும் விருந்தில் காணப்படும் அமைதியை, அன்பை, அழகைக் கண்டு ஈர்க்கப்பட்டு, எதிரிகளும் தங்கள் பகமையை மறந்து அந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் திட்டமாக இருக்கும்.

1914ம் ஆண்டு கிறிஸ்மஸ் இரவு துப்பாக்கிச் சப்தங்களை அமைதியாக்கி, எதிரிகளை ஒருங்கிணைத்தது. நாம் வாழும் இன்றைய உலகில், பெரும் திருவிழா காலங்களிலும் துப்பாக்கிச் சப்தங்கள் ஒலித்த வண்ணம் உள்ளது. அதுவும் இறைவனின் விருந்து நடக்கும் கோவில்களில் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. சனவரி முதல் நாள் எகிப்தில் கோவில் ஒன்றில் நடந்த தாக்குதல் வேதனை தரும் ஓர் உண்மை. வாழ்வெனும் போர்க்களத்தில் நமக்கு இறைவன் ஏற்பாடு செய்யும் விருந்தில் நம் எதிரிகளும் நம்மோடு சேர்ந்து உணவருந்தும்வண்ணம் இறைவன் நமக்கும் அவர்களுக்கும் நல்ல மன நிலையை உருவாக்க வேண்டுமென்று செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.