2011-01-11 15:22:54

கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவாரத்தையொட்டிய கிறிஸ்தவ சபைகளின் அறிக்கை.


சன 11, 2011. இம்மாதம் 18 முதல் 25 வரை சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செபவாரத்தையொட்டி கிறிஸ்தவ ஒன்றிப்பை ஊக்குவிக்கும் திருப்பீட அவையும், உலக கிறிஸ்தவ சபைகளின் அமைப்பும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

'அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறை வேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்' என்ற திருத்தூதர் பணி நூலின் வார்த்தைகளை கருப்பொருளாகக்கொண்டு இடம்பெற உள்ள இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரம், இவ்வாண்டு முழுவதுமான கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான தேடுதல்களுக்கு துவக்கமாக இருக்கும் எனவும் அவ்வறிக்கையில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எருசலேமின் கிறிஸ்தவர்களால் இவ்வொன்றிப்பு வாரத்திற்கென தயாரிக்கப்பட்டுள்ள செபமானது ஆன்மீகத் தூண்டுதலுக்கும் புதுப்பித்தலுக்கும் அழைப்பு விடுப்பதாக உள்ளது என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிப்பிற்கான இச்செபவாரத்தின்போது மக்கள் ஒன்று கூடுதல், வார்த்தை வழிபாட்டை நிறைவேற்றல், மனந்திரும்பல் மற்றும் அமைதிக்காக செபித்தல், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான சிறப்பு செபம், ஒப்புரவின் தூதுவர்களை மக்களிடையே அனுப்புதல் ஆகியவை இடம்பெறும் எனவும் அவ்வறிக்கை உரைக்கிறது.








All the contents on this site are copyrighted ©.