2011-01-10 12:31:44

சனவரி 11 - வாழ்ந்தவர் வழியில்


“ஓர் எளிய மனம் பிறர் மகிழ்ச்சியிலேதான் குறியாக இருக்கும். அது ஒருக்காலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காது. ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலும் இருக்கக்கூடாது. மிகுந்த செல்வத்திலும் இருக்கக்கூடாது. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நடுத்தர வர்க்கத்தினரால்தான் இந்த உலகம் இயங்குகிறது. அவர்கள்தான் சாதனைப் படைக்கிறார்கள், புதுமைகளைக் கண்டறிகிறார்கள்”.

இந்தக் கூற்றைத் தனது வாழ்க்கையில் உறுதிப்படுத்தியிருக்கிறார் சுதந்திர இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. இவர் மூன்று மாதக் குழந்தையாக இருந்த போது கங்கைக் கரையில் தாயின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது, எனவே இது தனக்குக் கடவுளின் பரிசு எனக் கருதி லால் பகதூரைத் தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையைக் காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரைக் கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்த்தனர். ஒரு முறை நண்பர்களுடன் கங்கை ஆற்றின் மறு கரையில் நடந்த சந்தையைப் பார்க்க போனார். திரும்பும் போது படகுக்கு கொடுக்க போதிய பணம் இல்லை, நண்பர்களிடம் கடன் பெறுவதற்குப் பதிலாக ஆற்றை நீந்தி கடந்தார். 1915ம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையைக் கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியைக் குறிக்கும் குடும்பப் பெயரை நீக்கினார். பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த அக்காலத்திலும் இவர் காதியையும் இராட்டையையும் மட்டும் வரதட்சணையாக வாங்கி கொண்டார். எத்தனையோ பதவிகள் வகித்த சாஸ்திரிக்கு சொந்தமாக வீடு ஒன்று கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத்தான் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான 22 நாள் போர் 1965ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி ஐ.நா. ஆணை மூலம் முடிவுக்கு வந்தது. இது குறித்த அமைதி உடன்பாட்டில் சாஸ்திரியும் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் 1966ம் ஆண்டு சனவரி 10ம் நாள் தாஷ்கண்ட்டில் கையெழுத்திட்டார்கள். அதற்கு அடுத்த நாள் அதிகாலை 1.32 மணிக்கு லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார் என்று அறிவிக்கப்பட்டது. இரஷ்யாவில் இறந்திருந்த இந்தியப் பிரதமர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஜான்ஸன், “சாஸ்திரி இல்லாமல் உலகமே கொஞ்சம் சிறுத்து விட்டது” என்று தெரிவித்தார். சாஸ்திரியின் உடலை சவப்பெட்டியில் ஏற்றி இந்தியா கொண்டுவர நடந்த ஏற்பாடுகளின் போது, கோஸிஜினும் அயூப்கானும் அந்தப் பெட்டியை விமானத்தில் ஏற்ற சுமந்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது








All the contents on this site are copyrighted ©.