2011-01-08 14:42:12

தேவையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவ நியுயார்க் பேராயர் உறுதி


சன.08,2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேவையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவுவதற்கான வாக்குறுதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் நியுயார்க் பேராயர் டோலன்.

நியுயார்க் நகரில் 2009ம் ஆண்டில் 41 விழுக்காட்டுக் கருக்கலைப்புகள் செய்யப்பட்டன என்று அண்மையில் கணக்கெடுப்பு ஒன்று வெளியாகியதை முன்னிட்டு இவ்வாறு உறுதியளித்த பேராயர் டோலன், தனக்கு முன்னர் இந்நகரில் மறைப்பணியாற்றிய பேராயர்களைப் போன்று தானும் தேவையில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவவிருப்பதாகத் தெரிவித்தார்.

இவ்வாண்டு நியுயார்க் உயர்மறைமாவட்டக் கத்தோலிக்கப் பள்ளிகளில் கற்பு வாழ்வைப் பற்றிய கல்வியைத் தீவிரப்படுததத் திட்டமிட்டிருப்பதாக பேராயர் டோலன் கூறினார்

நியுயார்க் நகர் நலவாழ்வு மற்றும் மனநலத் துறை இந்த டிசம்பரில் வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி 2009ம் ஆண்டில் 87 ஆயிரம் கருக்கலைப்புகள் செய்யப்பட்டன, இவ்வெண்ணிக்கை இதற்கு முந்தைய ஆண்டுகளைவிடக் குறைவாகும்







All the contents on this site are copyrighted ©.