2011-01-08 15:44:32

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
தந்தை மகன் உறவைக் கூறும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அவைகளில் என் மனதில் ஆழமாய் பதிந்த ஒரு கதை இது. டீன்ஏஜ் இளைஞன் ஒருவன் தன் தந்தையுடன் வாழ்ந்து வந்தான். இருவருக்கும் மிக ஆழமான, அழகான உறவு இருந்தது. இளைஞன் கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டவன். ஆனால், அவன் உடல் அந்த விளையாட்டிற்கு ஏற்றது போல் வலுமிக்கதாய் இல்லை. இருந்தாலும் அவனுக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு பயிற்சியாளர் கல்லூரி கால்பந்தாட்டக் குழுவில் ஓர் இடம் கொடுத்தார். பல போட்டிகளில் அவன் விளையாடாமல், ஓரத்திலிருந்து தன் குழுவினரை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பான். அவன் களமிறங்கி விளையாடாவிட்டாலும், அவனது குழு விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அவன் தந்தை வருவார். உற்சாகமாய் கைதட்டி இரசிப்பார்.
ஈராண்டுகள் இப்படியே உருண்டோடின. முக்கியமான ஒரு போட்டி நெருங்கி வந்ததால், குழுவினர் அனைவரும் வெறியுடன் பயிற்சி பெற்று வந்தனர், இந்த இளைஞனையும் சேர்த்து. அந்நேரத்தில் இளைஞனின் தந்தை இறந்து விட்ட செய்தி வந்தது. பயிற்சியாளர் இளைஞனை ஆதரவாய் அணைத்து ஆறுதல் சொல்லி, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். போட்டியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள், முக்கியமான அந்த போட்டி நடைபெற்றது. இளைஞனின் குழு சரிவர விளையாடவில்லை. எனவே, தோற்கும் நிலையில் இருந்தனர். விளையாட்டின் பாதி நேர இடைவேளையின் போது அந்த இளைஞன் திரும்பி வருவதைக் குழுவினர் பார்த்தனர். அதுவும், குழுவின் சீருடை அணிந்து விளையாட வந்திருந்தான் அவன். அவனுக்கு கால்பந்தாட்டத்தின் மீது இருந்த ஆர்வம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும், அதற்காக இப்படியா? தந்தையின் அடக்கம் முடிந்தும் முடியாமல், அவன் விளையாட்டுத் திடலுக்கு வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. இவ்வளவுக்கும், அவனுக்கும் அவன் தந்தைக்கும் இருந்த நெருங்கிய உறவை அனைவரும் பார்த்திருந்தனர். எனவே, இந்த அவனது செயலை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
திடலுக்கு வந்தவன் பயிற்சியாளரிடம் சென்று, "சார் இந்த இரண்டாவது பாதியில் தயவு செய்து என்னை விளையாட அனுமதியுங்கள்." என்று கெஞ்சினான். ஏற்கனவே தன் குழு தோற்றுக் கொண்டிருந்த சூழ்நிலையில், இவனை இறக்கினால் நிலைமை இன்னும் மோசமாகுமே என்று பயிற்சியாளர் பயந்தார். எனினும், அந்த இளைஞனின் மனதை உடைக்க விரும்பவில்லை. மேலும் அந்த இளைஞனின் கண்களில் கண்ணீரோடு சேர்ந்து தெரிந்த அந்த ஆர்வத்தால், அனுமதி அளித்தார்.
இரண்டாவது பாதியில் அந்த இளைஞனின் அற்புதமான விளையாட்டால், தோற்கும் நிலையில் இருந்த அவனது குழு வெற்றி அடைந்தது. அவனது குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சி; எதிரணிக்கும் அதிர்ச்சி. ஆட்டத்தின் முடிவில் அந்த இளைஞனைத் தோள்களில் சுமந்து ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் எல்லாம் ஓய்ந்த பின், பயிற்சியாளர் அவனிடம், "தம்பி, என்னால் இதை நம்பவே முடியவில்லை. உனக்கு என்ன ஆயிற்று? எங்கிருந்து வந்தது உன் பலம், திறமை எல்லாம்?" என்று நேரடியாகவே கேட்டார்.
இளைஞன் கண்ணீரோடு பேசினான்: "சார், என் அப்பா இறந்துவிட்டார் என்பது மட்டுமே உங்கள் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பார்வையே இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான். குழுவினரும், பயிற்சியாளரும் அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். இளைஞன் தொடர்ந்தான்: "ஆம், என் அப்பாவுக்கு பார்வைத் திறன் கிடையாது. ஆனால், எனது குழுவின் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தவறாமல் வந்து என்னை உற்சாகப்படுத்தினார். இன்று இந்த ஆட்டத்தைத்தான் முதன் முதலாக அவர் வானிலிருந்து கண்ணாரக் கண்டிருப்பார். அவர் பார்க்கிறார் என்பதற்காக, அவரை மகிழ்விக்க நான் என் முழு திறமையை இன்று வெளிப்படுத்தினேன்." என்று அவன் சொல்லி முடிக்கும் போது, அங்கிருந்தவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது. ஆனந்தக் கண்ணீர்.

புறக் கண்களால் பார்க்கும் திறனற்ற ஒரு தந்தை தன் மகனை அவனது கனவில் அவனது திறமைகளில் வளர்த்த கதை இது. புறக் கண்களால் மனிதர்கள் பார்க்க முடியாத விண்ணகத் தந்தை தன் மகன் இயேசுவின் கனவுகளை ஆரம்பித்து வைத்த ஒரு நிகழ்வை இன்றைய நற்செய்தி நமக்குத் தருகிறது. இயேசு திருமுழுக்கு பெற்றதும், தந்தை அவரை உலகிற்குப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார்... “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (மத்தேயு 3: 17)

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் மனிதக் குழந்தை வளர்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலமே அதிகமான காலம். மற்ற உயிரினங்களின் வளர்ச்சிக்கு இவ்வளவு அதிகமான நேரம் தேவைப்படுவதில்லை. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத்தர வேண்டுமா என்பது நம் பேச்சு வழக்கு. மீன் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்ததும் நீந்த ஆரம்பிக்கும். யாரும் அவைகளுக்குப் பாடங்கள் சொல்லித் தருவதில்லை. அதேபோல், பிற மிருகக் குட்டிகள், பறவைக் குஞ்சுகள் எல்லாம் குறைவான காலத்திலேயே வளர்ந்துவிட்ட மிருகங்கள், பறவைகள் போல் செயல்பட ஆரம்பித்து விடுகின்றன. மனித குழந்தையின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் ஆகின்றன.
உடலளவில் ஒரு குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு பருவங்களில் நாம் கொண்டாடுகிறோம். குழந்தை குப்புறப்படுக்கும் போது, குழந்தை தன் முதல் அடியெடுத்து நடக்கும் போது என்று... பல நிலைகளை நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் குழந்தைகள் வளர்வதைக் கொண்டாடுவது போல், உள்ளத்தளவில், அறிவுத் திறனில் அவர்கள் வளர்வதையும் நாம் பல வழிகளில் கொண்டாடுகிறோம், அங்கீகரிக்கிறோம். ஓர் இளைஞன் அல்லது இளம் பெண் தன்னையே ஆளும் திறமை பெறுவதை பல கலாச்சாரங்கள், பல மதங்கள் சடங்குகள் வழியாகக் கொண்டாடுகின்றன. இனி இந்த இளைஞன் அல்லது இளம் பெண் இந்த உலகைத் தனியே சந்திக்க திறமை பெற்றுள்ளனர் என்று இந்த கொண்டாட்டங்கள் சொல்கின்றன.
நமது மனித வளர்ச்சியின் படிகளை எண்ணிப்பார்க்க இந்த ஞாயிறு நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தருகிறது. அதிலும், நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வாழ்வை நாமே நிர்ணயிக்கும் முக்கிய நிலையை எண்ணிப் பார்க்க இந்த ஞாயிறு ஒரு நல்ல தருணம்.

இயேசு யோர்தான் நதியில் திருமுழுக்கு பெற்றதை இன்று நாம் கொண்டாடுகிறோம். தன் வாழ்வை, தன் பணியை நிர்ணயிக்க, தீர்மானிக்க இயேசு தன் முதல் அடியை எடுத்து வைக்கிறார். அவர் எடுத்து வைத்த முதல் அடியையே தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்து வைத்தார். இது நம் சிந்தனைகளைத் தூண்டும் அழகான ஓர் அடையாளம்.
உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. தான் மேற்கொள்ளவிருக்கும் பணியும் ஓடும் நீரைப் போல் இருக்கப்போகிறதென்று இயேசு சொல்லாமல் சொன்னாரோ? இனி தொடரும் தன் பணிவாழ்வில் தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் இயேசுவுக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?
ஓடும் நீரில் மற்றொரு அழகும் உண்டு... அந்நீரில் உயிர்கள் வளரும். தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழும் வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடியாகத் தேர்ந்தெடுத்தார்.

அந்த ஆற்றின் நீரில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். எந்த மக்களை விடுவிக்க அவர் தீர்மானித்தாரோ, அந்த மக்களில் ஒருவராய் மாறினார். அவர் அப்படி கலந்து, கரைந்து நின்றது திருமுழுக்கு யோவானுக்குச் சங்கடத்தை விளைவித்தது. எனினும், இயேசு தன் முடிவிலிருந்து மாறவில்லை.
ஓடும் நீரில் இறங்கியது, மக்களோடு மக்களாய் கரைந்தது என்ற இந்த இரு செயல்கள் வழியாக தன் பணியின் நோக்கத்தை இயேசு உலகறியச் செய்தார். விண்ணகத் தந்தையும் தன் பங்கிற்கு தன் அன்பு மகனை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பொறுப்பான பணியில் இறங்கும் ஒவ்வொருவரும் தாங்கள் செய்ய இருப்பதை திட்டங்களாகச் சொல்வார்கள். முக்கியமாக, மக்களின் தலைவர்களாய் மாறத் துடிப்பவர்கள், தாங்கள் பொறுப்புக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதைத் தேவைக்கும் அதிகமாக பறை சாற்றுவார்கள். அந்த ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல், இயேசு தன் பணிவாழ்வை யோர்தான் நதியில் ஆரம்பித்தார். “இவரே என் அன்பார்ந்த மைந்தர்” என்று தந்தை வானத்திலிருந்து முழங்கிய போது, தன் மைந்தனுக்குரிய, தன் பணியைச் செய்யும் ஊழியனுக்குரிய இலக்கணத்தை உலகறியச் செய்தார். அந்த இலக்கணம் இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு இறைவாக்கினர் எசாயா மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

எசாயா 42: 1-4, 6-7
இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்: நான் தேர்ந்துகொண்டவர் அவர்: அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது: அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்: அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்: தம்குரலை உயர்த்தமாட்டார்: தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்: மங்கி எரியும் திரியை அணையார்: உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்: மனம் தளரமாட்டார்: அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்: உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்: மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன். 
இறுதியாக, அன்புள்ளங்களே, இரு சிறப்பான வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். கடந்த நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் எனக்குத் தெரிந்த பல குரு மாணவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த புது குருக்கள் ஒவ்வொருவரும் எசாயா கூறும் இறை ஊழியர்களாய் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள சிறப்பாக செபிப்போம். குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் உண்மையான இறை ஊழியர்களாய் விளங்கவும் செபிப்போம்.
 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பமான அகிலஉலக இளையோர் ஆண்டு இன்னும் தொடர்கிறது. ஒவ்வோர் இளைஞனும், இளம் பெண்ணும் இந்த உலகில் தங்கள் வாழ்வை, பணியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளனர். ஓடும் நீரைப் போன்ற உறுதியற்றச் சூழ்நிலைகளில் அவர்கள் நல்ல முடிவுகளை எடுக்கவும், அம்முடிவுகளின் இறுதியில் அவர்கள் கரையேறும் போது, அவர்களை இறைவன் தன் அன்புப் பிள்ளைகள் என்று உலகறிய அறிமுகப்படுத்தவும் வேண்டுமென்று அவர்களுக்காகவும் செபிப்போம்.







All the contents on this site are copyrighted ©.