2011-01-08 15:44:20

சனவரி 09, வாழந்தவர் வழியில்...


கேளிக்கை, வேடிக்கை என்பது வரலாற்றின் துவக்கத்திலிருந்து மனிதர்களை ஈர்த்து வந்திருக்க வேண்டும். இந்த ஈர்ப்பு இல்லையெனில், கலைகள் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. தனிப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு குழுவின் திறமைகளை வெளிப்படுத்த கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உருவாகியிருக்க வேண்டும். நாளடைவில் இந்நிகழ்ச்சிகள் திறமைகளை வெளிப்படுத்துவதற்குப் பதில் போட்டிகளாக மாறிவிட்டன.
ஒருவர் பிறரோடு தங்கள் திறமைகளை ஒப்பிடுவது ஒரு வகை போட்டி. ஒரு சிலர் தங்கள் உடல் திறனோடு, அறிவுத் திறனோடு போட்டியிடுவதும் உண்டு. சராசரி மனித உடல் செய்யக்கூடியவை, அல்லது சராசரி மனித அறிவு செய்யக்கூடியவை என்ற எல்லைகளைத் தாண்டி தனிப்பட்ட மனிதர்கள் செயல்படும்போது, அவர்களது செயல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இவ்விதம் மனித குலத்தின் வியப்பைக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியை நாம் 'சர்க்கஸ்' (Circus) என்கிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் இந்த அட்டகாசமான மனித முயற்சிகள் 'சர்க்கஸ்' என்ற பெயரில் 1768ம் ஆண்டு சனவரி 9ம் தேதி இலண்டனில் முதலாக நடத்திக் காட்டப்பட்டது. இயற்கை நமக்கு வகுத்துள்ள எல்லைகளைக் கடப்பதில் மனிதர்கள் எப்போதும் ஆவல் கொண்டவர்கள் என்பதற்கு அழகிய ஓர் எடுத்துக்காட்டு - சர்க்கஸ்!







All the contents on this site are copyrighted ©.