2011-01-07 14:35:45

எகிப்தில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரானத் தாக்குதல் இசுலாமியம் அதிகரிப்பதைப் பிரதிபலிக்கின்றது - திருச்சபைத் தலைவர்கள்


சன.07,2011. எகிப்தில் கிறிஸ்தவர்க்கெதிராக நடத்தப்பட்ட கடும் வன்முறைத் தாக்குதல் அந்நாட்டு அரசியல் குழப்பநிலையின் ஒரு செயலாகவும் நாட்டை இசுலாம் மயமாக்குவதற்கானத் தீவிர முயற்சிகள் அதிகரித்து வருவதன் அடையாளமாகவும் இருக்கின்றது என்று எகிப்திலுள்ள காப்டிக் ரீதிக் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் கூறுகின்றனர்.

எகிப்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இசுலாமியம் அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது எனவும் கிறிஸ்தவர்க்கெதிரான அண்மைத் தாக்குதலுக்கு அல் கெய்தா அமைப்பு காரணம் எனத் தினத்தாள்கள் குறிப்பிடுவதாகவும் அலெக்சாண்டிரியா துணை ஆயர் கமல் ஃபாஹிம் ஹன்னா கூறினார்.

காப்டிக் ரீதிக் கிறிஸ்தவர்கள் இவ்வெள்ளியன்று கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பித்ததை முன்னிட்டு எல்லாக் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் கடும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்ததாகவும் ஆயர் ஹன்னா தெரிவித்தார்.

இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தை எழுப்பிய தாக்குதல் இடம் பெற்றிருந்தாலும் பல எகிப்தியக் கிறிஸ்தவர்கள் நிதானமாக இருக்கிறார்கள், தாக்கியவர்களுக்காகக் கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் வேண்டுகிறார்கள் என்றும் ஆயர் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.