2011-01-07 14:34:14

இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் : கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை குறித்துத் திருத்தந்தை அதிர்ச்சி


சன.07,2011. உலக அளவில் பரவலாக இடம் பெற்று வரும் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறை மற்றும் சகிப்பற்றதன்மை குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அதிர்ச்சியடைந்துள்ளதாக இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ Angelo Bagnasco கூறினார்.

எகிப்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் இந்த சனவரி முதல் தேதி தாக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவர்க்கெதிராகக் காட்டப்படும் இவ்வளவு சமய சகிப்பற்றதன்மை குறித்து திருத்தந்தையோடு சேர்ந்து தாங்களும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறினார் கர்தினால் பஞ்ஞாஸ்கோ.

ஜெனோவாவில் திருக்காட்சித் திருவிழாத் திருப்பலி நிகழ்த்திய போது இவ்வாறு உரைத்த ஜெனோவா பேராயரான கர்தினால் பஞ்ஞாஸ்கோ, கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் ஏன் என்ற கேள்வியை மிகுந்த கவலையுடன் எழுப்புவதாகக் கூறினார்.

கிறிஸ்தவர்கள் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிப்படுத்தப்படவும் செபித்த கர்தினால், துன்புறும் கிறிஸ்தவச் சமூகங்களுடன் தோழமையுணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.








All the contents on this site are copyrighted ©.