2011-01-06 15:19:41

திருத்தந்தை - திருகாட்சிப் பேருண்மையில் திருச்சபை தனது மறைப்பணியை உணருகின்றது


சன.06,2011. மேலும், இந்தத் திருகாட்சித் திருவிழாத் திருப்பலியை முடித்து பகல் 12 மணிக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, மூன்று கீழ்த்திசை ஞானிகளை வழி நடத்திய விண்மீனின் பணியைப் பின்பற்றுவதற்குக் கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறினார்.

இறையரசின் எல்லாவிதமான அழகினாலும் கவரப்படுவதற்கு அவர்கள் ஒளியின் மக்களாகவும் ஒளிர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர், அனைத்து மக்களின் ஒளியாக விளங்கும் இயேசு கிறிஸ்துவின் திருவெளிப்பாட்டில் திருச்சபை அகமகிழ்கின்றது என்றார்.

இந்நாளில் பாலர் சபை தினம் கடைபிடிக்கப்பட்டதையொட்டிப் பேசிய திருத்தந்தை சிறார், தன்னலம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தினின்று விடுபட்டவர்களாய் வாழுமாறும் வலியுறுத்தினார்.

வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில், கடவுளால் மட்டுமே கொடுக்கக்கூடிய வாழ்வு மற்றும் உண்மையின் நிறைவுக்கு மனித சமுதாயம் அனைத்தையும் கிறிஸ்துவின் மகிமையின் ஒளி இட்டுச் செல்வதாக என்றும் திருத்தந்தை கூறினார்.

ஒவ்வொரு மனிதனும் இயேசுவின் மனித முகத்தில் கடவுளின் முகத்தைக் காண முடியும் என்பதால் இயேசுவையும் அவரது நற்செய்தியையும் அறிவிப்பதையே திருச்சபை தனது மறைப்பணிக்கு உந்து சக்தியாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இயேசு யார் என்ற சிந்தனையைத் திருச்சபை எல்லா மனிதரின் இதயங்களில் எழுப்ப விரும்புகின்றது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த விழா, எல்லா நாடுகளுக்கும் நற்செய்தி அறிவிப்பதற்கு அகிலத் திருச்சபைக்கு அழைப்பு விடுக்கின்றது என்றும் கூறினார்.

சனவரி 7ம் தேதி கிறிஸ்மஸ் பெருவிழாவைச் சிறப்பிக்கும் உலக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.