2011-01-06 15:22:28

ஆப்ரிக்க விவசாயிகள், அடிமைத்தனத்தின் புது வடிவத்தை எதிர்கொள்கின்றனர் – திருப்பீட அதிகாரி


சன.06,2011. ஆப்ரிக்காவில் விளைநிலங்கள், ஆயுத மோதல்களால் மாசுபடுத்தப்படாமல் இருந்தால் அக்கண்டத்து மக்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு மரபணு முறையில் மாற்றப்பட்ட விதைகள் அவர்களுக்குத் தேவைப்படாது என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கூறினார்.

ஆப்ரிக்க விவசாயிகள், மரபணு முறையில் மாற்றப்பட்ட விதைகளைச் சார்ந்து இருப்பதால் அது அவர்களின் பொருளாதாரச் சார்புநிலையில் அடிமைத்தனத்தின் புது வடிவமாக இருக்கின்றது என்றுரைத்த கர்தினால் பீட்டர் டர்க்சன், இந்நிலைத் தவிர்க்கப்படுவதற்கு அம்மக்கள் மாசுபடாத செழிப்பான நிலங்களைக் கொண்டிருக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.

L'Osservatore Romano என்ற திருப்பீட சார்புத் தினத்தாளுக்குப் பேட்டியளித்த ஆப்ரிக்கக் கர்தினால் டர்க்சன், உலக மக்கள் அனைவரையும் போஷிப்பதற்குத் தேவையான உணவுக்கு அதிகமாகவே உணவுப் பொருட்கள் இருக்கும்வேளை, சுமார் நூறு கோடி மக்கள் பசியால் வாடுவது துர்மாதிரிகையானது என்று கூறினார்.

தற்போதைய உலக மக்கள் தொகையைவிட இரண்டு மடங்குக்கு அதிகமான மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்று கூறிய அவர், அதிகத் தோழமையும் தன்னலமின்மையும் தேவை என்றார்.







All the contents on this site are copyrighted ©.