2011-01-05 15:30:23

சூடானில் நடைபெற உள்ள மக்கள் வாக்கெடுப்பு வரலாற்றில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் - கத்தோலிக்க ஆயர்கள்


சன.05, 2011. சூடான் நாட்டை வடக்கு சூடான் தெற்கு சூடான் எனப் பிரிப்பதற்கு இஞ்ஞாயிறன்று நடைபெற உள்ள மக்கள் வாக்கெடுப்பு அந்நாட்டின் வரலாற்றில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்று சூடான் கத்தோலிக்க ஆயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கத்தோலிக்கர்களை அதிகம் வாழும் தெற்குப் பகுதிகளை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வடக்குப் பகுதிகளிலிருந்து பிரித்து தனி நாடாக்கும் ஒரு முயற்சியாக இவ்வாக்கெடுப்பு நடை பெற உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் தெற்குப் பகுதியின் மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வேண்டுமென்று திருச்சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மதங்களின் அடிப்படையில் பிளவுபட்டுள்ள இவ்விரு பகுதிகளிடையே இரு முறை ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை இவ்விரு பகுதிகளுக்கும் இடையே நல்லுறவு நிலவவில்லை என்று கூறப்படுகிறது.இவ்வாக்கெடுப்பின் மூலம் சூடான் சந்தித்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று தாங்கள் நம்புவதாக ஆயர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.