2011-01-05 15:31:48

ஓர் அரசு சாரா அமைப்பு வட கொரியக் கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்யத் திட்டமிட்டுள்ளது


சன.05,2011. வட கொரியாவில் மறைந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாண்டில் உதவி செய்யவிருப்பதாக Voice of the Martyrs (VOM) என்ற சர்வதேச அரசு சாரா அமைப்பு அறிவித்துள்ளது.
வட கொரியக் கம்யூனிச அதிகாரிகளின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் இரகசியமாகத் தங்களது விசுவாச வாழ்வை வாழும் அந்நாட்டு பிரிந்த சபைக் கிறிஸ்தவர்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்கள், மருந்துகள் மற்றும் விவிலியங்களை அனுப்பவிருப்பதாக இந்த VOM அமைப்பின் கானடா அலுவலகம் அறிவித்தது.
இந்த 2011ம் ஆண்டின் முதல் பாதி பகுதியில் 1600 கிறிஸ்தவக் குடும்பங்களுக்குத் தேவையான எண்பதாயிரம் டாலர் பெறுமான பொருட்களை இந்த அமைப்பு அனுப்பும் என்று அதன் பேச்சாளர் கூறினார்.
சீனாவிலுள்ள இந்த அமைப்பின் அலுவலகம் மூலம் இவ்வுதவிகள் அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரொமேனிய நாட்டில் கம்யூனிசம் ஆட்சியிலிருந்த போது 14 ஆண்டுகள் சிறையில் இருந்த Richard Wurmbrand என்ற போதகர் 1967ம் ஆண்டு VOM என்ற அமைப்பை உருவாக்கினார். வட கொரியாவில் சுமார் இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்கள் இரகசியமாகத் தங்களது விசுவாசத்தைக் கடைபிடித்து வருகின்றனர் என்று “Open Doors” என்ற மற்றுமோர் அரசு சாரா அமைப்பு கூறியது.







All the contents on this site are copyrighted ©.