2011-01-04 14:27:08

கொரியத் திருச்சபை கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை ஊக்குவிக்கிறது


சன.04,2011.கிறிஸ்தவச் சபைகளுக்கிடையே இருக்கும் பிளவுகளுக்கு அச்சபைகளே காரணம் என்பதை ஏற்கும்பொழுது அச்சபைகளுக்கிடையே உண்மையான ஒன்றிப்பு ஏற்படத் தொடங்கும் என்று கொரிய ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணையத் தலைவர் கூறினார்.

இயேசுவின் உயிர்ப்பை அனுபவித்த முதல் கிறிஸ்தவர்கள் தங்களுக்கிடையே வேற்றுமைகள் இருந்த போதிலும் அவர்கள் இடையறாது சேர்ந்து செபித்தனர், சேர்ந்து வாழ்ந்தனர் என்று குவாங்சு பேராயர் ஹைஜினுஸ் கிம் ஹி-ஜுங் கூறினார்.

சனவரி 18 முதல் 25 வரை கடைபிடிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கெனச் செய்தி வெளியிட்டுள்ள பேராயர் கிம், கத்தோலிக்கர், வீடுகளிலும் பணியிடங்களிலும் பிரிந்த கிறிஸ்தவ சபை சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து செபிப்பதற்கு இந்த ஒன்றிப்பு

வாரம் நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரியாவில் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் திருச்சபைகள் ஒருவர் மற்றவர் ஆலயங்களுக்குச் சென்று சேர்ந்து செபிக்கத் தொடங்கிய 1965ம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.








All the contents on this site are copyrighted ©.