2011-01-04 14:39:12

இந்திய அறிவியல் குழு புதுமையாகச் சிந்திக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன்சிங்


சன.04,2011. இந்திய அறிவியல் சமூகம் காலங்களைக் கடந்து சிந்திக்கவும் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் வேண்டுமென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், 98வது இந்திய அறிவியல் மாநாட்டை இத்திங்கள்கிழமை தொடங்கி வைத்து உரையாற்றிய மன்மோகன் சிங், 2012-13 ஆம் ஆண்டை அறிவியல் ஆண்டாகக் கொண்டாட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

நொபெல் விஞ்ஞானி ராமன் போன்ற ராமன்களையும் கணித மேதை இராமானுஜன் போன்ற இராமானுஜன்களையும் 21ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கென உருவாக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக எட்டு இந்திய தொழில்நுட்பக் கழகங்களையும், ஐந்து இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், உயர் கல்வியை வழங்கவும் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரம் ஆராய்ச்சி முனைவர்களை உருவாக்கும் வகையில் அறிவியல் ஆராய்ச்சி கழகம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்கள் புதுமையான எண்ணங்களுக்கும், அறிவுஜீவிகளுக்கும் வரவேற்பு அளிக்கும் இடங்களாக மாற வேண்டும். அதற்கேற்ற வகையில், அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்தும், நடைமுறைகளிலிருந்தும் பல்கலைக்கழகங்களை விடுவிக்க வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் தனது உரையில் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில், நொபெல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்பட அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் 27 பேருக்கு பிரதமர் விருதுகளையும் வழங்கினார்.

இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 140 முக்கிய அறிவியலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும், இம்மாநாட்டுத் தொடக்க விழாவில் பேசிய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆராய்ச்சியிலும் கல்வியிலும் கவனம் செலுத்த 14 புதுமைப் பல்கலைக்கழகங்கள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.