2011-01-03 15:01:01

சனவரி 04 - வாழ்ந்தவர் வழியில்


கண்பார்வையை இழந்தவர்கள் ஒருபோதும் வாசிக்கவே முடியாது என்ற எண்ணம் பரவலாக இருந்த காலக் கட்டத்தில் ஒரு ப்ரெஞ்ச் இளைஞன் மட்டும் வித்தியாசமாகச் சிந்தித்தான். மூன்று வயதில் தந்தையின் தொழிற்பட்டறையிலிருந்த கூர்மையான ஊசியை வைத்து விளையாடிய போது எதிர்பாராத விதமாக ஒரு கண்ணில் அது குத்தியதில் அவனுக்குக் காயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் சரியானச் சிகிச்சை கொடுக்கப்படாததால் அந்தக் கண்ணின் பார்வை பறிபோனது. ஆனால் அடுத்த கண்ணும் பரிவுக்கண் (Sympathetic ophthalmia) என்ற நோயால் தாக்கப்பட்டு அதிலும் பார்வை போனது. பள்ளியில் சேர்ந்த போது மற்ற மாணவர்கள் போல் இவனால் வாசிக்க முடியவில்லை. சக மாணவர்களின் கேலிக்கூத்துக்கும் ஆளானான். தனி அறையில்கூட இவனை வைத்து அடைத்து கேலி செய்துள்ளனர். இறுதியில் பாரிசில் கண்பார்வையற்றவர்க்கானப் பள்ளியில் சேர்ந்து படித்தான். இசையில் சிறந்தோங்கினான். பிரான்சில் இவன் ஆர்கன் வாசிக்காத ஆலயங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு இசையில் தேர்ச்சி அடைந்திருந்தான். ஒருநாள் பாரிசில் பள்ளியை விட்டு வெளியே வரும் போது ப்ரெஞ்ச் இராணுவத்தினர் இரவில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தும் இரகசிய புள்ளிக் குறிகள் பற்றி அவன் கேள்விப்பட்டான். மிகுந்த படைப்பாற்றல் கொண்ட திறமைசாலியான அவன், இந்தக் குறிகளில் சிலவற்றைப் பயன்படுத்தி புத்தகங்களை வாசிக்க முயற்சித்தான். தந்தையின் தொழிற் பட்டறையில் அமர்ந்து அவனது பார்வை பறிபோகக் காரணமாக இருந்த அதே கருவியை வைத்து புள்ளிகளை உருவாக்கினான். பார்வையற்றவர்கள் கைகளால் தடவிப் பார்த்துப் படிப்பதற்கு ஏற்ற ஆறு புள்ளிகள் அமைப்பைக் கொண்ட ப்ரெயில் எழுத்தினைக் கண்டுபிடித்தான். இந்த இளைஞன்தான் லூயிஸ் ப்ரெயில். 1809ம் ஆண்டு சனவரி 4ம் தேதி பிறந்த லூயி 1829ல் ப்ரெயில் எழுத்தில் தனது முதல் நூலை வெளியிட்டார். பார்வையற்றவர்களும் எழுத வாசிக்க முடியும், வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தியவர் லூயி ப்ரெயில். இவர் மாணவர்களால் போற்றப்பட்டாலும் இவர் உயிரோடு வாழ்ந்த வரை இவரது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்படவில்லை. இவர் இறந்த இரண்டு ஆண்டுகள் கழித்தே அது பயன்பாட்டுக்கு வந்தது. இவர் காச நோயால் பாதிக்கப்பட்டு தனது 43வது வயதில் 1852ம் ஆண்டு இறந்தார்.

உலக நலவாழ்வு நிறுவனம் வெளியிட்ட விபரங்களின்படி 2009ம் ஆண்டில் உலகில் ஏறக்குறைய 31 கோடியே 40 இலட்சம் பேர் கண்பார்வை பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் சுமார் 87 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர். இவர்களில் 4 கோடியே 50 இலட்சம் பேர் கண்பார்வையற்றவர்கள்.

இயேசு சொன்னார்:“கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளிபெற்றிருக்கும்” என்று. (மத்.6,22)







All the contents on this site are copyrighted ©.