2011-01-03 15:38:16

கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்து கவலையை வெளியிட்டார் திருத்தந்தை.


ஜன 03, 2010. ஈராக் நாட்டில் கிறிஸ்தவர்களை அச்சுறுத்துவதற்கென அவர்களின் வீடுகள் அருகே குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெறுவது போல் எகிப்திலும் புத்தாண்டு தினத்தன்று காப்டிக் கோவில் ஒன்றில் குண்டு வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

புத்தாண்டு தினத்தன்று உலகின் அமைதிக்காக தான் செபித்ததையும் நினைவு கூர்ந்த திருத்தந்தை, இத்தகைய வன்முறை நடவடிக்கைகள், மனித குலத்திற்கும் இறைவனுக்கும் ஊறுவிளைவிப்பவை என தன் ஞாயிறு மூவேளை ஜெப உரையின் போது எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களுக்கு எதிரான இவ்வன்முறைகளின் மத்தியிலும் விசுவாசிகள், நற்செய்தி காட்டும் வன்முறையற்ற நிலைகளின் சாட்சிகளாக விளங்கி, விசுவாசத்தில் நிலைத்திருக்குமாறு ஊக்கமளிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.

மறைப்பணி நடவடிக்கைகளின் போது 2010ம் ஆண்டில் கொல்லப்பட்ட அனைவரையும் இவ்வேளையில் நினைவுகூர்வதாகவும் எடுத்துரைத்து, நமது நம்பிக்கையும் அமைதியுமாக இருக்கும் கிறிஸ்துவில் என்றும் நிலைத்திருப்போம் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.